மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் பத்தாவது மலைபடுகடாம், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது.
நூல்
கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்
திருமழை தலைஇய இருணிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத் திண்வார் விசித்த முழவொ டாகுளி நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு |
5 |
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின் இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி |
10 |
நொடிதரு பாணிய பதலையும் பிறவும் கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர் |
பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார். கூத்தர் கூட்டத்தில் பாணன் வைத்திருக்கும் இசைக்கருவிகள் பேரியாழ் (பாடலடி 37) மீட்டும் பாணன் (பாடலடி 40) தன் இசைக் கருவிகளைத் துணிப்பையில் போட்டுத் தோளில் சுமந்துகொண்டு செல்கிறான். கலப்பை - கலம் என்னும் சொல் பொது வகையில் இசைக் கருவிகளையும், சிறப்பு வகையால் யாழையும் குறிக்கும். எனவே இவற்றை வைத்திருக்கும் பை கலப்பை. முழவு - யாழோசை மழை பொழிவது போல எல்லாராலும் விரும்பப்படும் தன்மையதாக இருக்கும். முழவு ஓசை மழை பொழியும்போதே முழங்கும் இடி போல இருக்கும். ஆகுளி - யாழோடும் முழவோடும் சேர்ந்து முழங்குவது ஆகுளி என்னும் சிறுபறை. (கஞ்சரா?) பாண்டில் - வெண்கலத்தை உருக்கிச் செய்த தாளம். உயிர்த்தூம்பு - யானை பிளிறுவது போல உயிர்ப்பொலி தரும் கொம்பு. அதன் வளைவமைதி தன் தலையைப் பின்புறமாகத் திருப்பிப் பார்க்கும் மயிலின் பீலிபோல் அமைந்திருந்தது. குறும்பரந்தூம்பு - மெல்லிய இரங்கல் ஓசை தரும் ஊதுகொம்பு. குழல் - அழைத்திழுக்கும் ஒலிதரும் குழல்.(கண்ணன் குழலோசை ஆடுமாடுகளை அழைத்திருத்தியதை இங்கு நினைவு கூரலாம்.) தட்டை - ஒருபுறம் கோலால் உரசி இழுத்தும் மறுபுறம் கோலால் தட்டியும் இசை எழுப்பும் உருமிமேள வகை. (சப்பளாக் கட்டையுமாம்). எல்லரி - மோத ஒலிக்கும் பெரிய தாளவகை. பதலை - கடம் என்று நாம் கூறும் பானை. மற்றும் பல. இவற்றை யெல்லாம் வேரில் காய்த்துத் தொங்கும் பலாக்காய் போலப் பாணர்கள் சுமந்து சென்றனர்.
அவர்கள் கடந்து வந்த மலை வழி
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில் படுத்துவைத் தன்ன பாறை மருங்கின் |
15 |
எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர் இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும் |
நீங்கள் செல்லும் வழியில் வழிப்பறி செய்ய அம்பு தொடுத்துக்கொண்டு காத்திருக்கும் கானவர் உங்களுக்குத் துன்பம் செய்யமாட்டார்கள். துணைபுணர் கானவர், துணைபுரியும் கானவர். கண்ணுக்கு எட்டிய தூரம் நெருங்கித் தழைத்திருக்கும் மரம் அடர்ந்த காட்டில் படுக்க வைத்தது போன்ற பாறைகளும், நிறுத்தி வைத்தது போன்ற பாதை வழிகளும் இருக்கும். வில்லம்பு வைத்திருக்கும் கானவர் அந்த இடங்களில் உங்களுக்குத் துணையாக வருவர். துன்பம் செய்யாமல் வழி காட்டுவர்.
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித |
20 |
பேரியாழின் இயல்பு
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின் கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக் குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின் அரலை தீர உரீஇ வரகின் குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச் |
25 |
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி இலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப் புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப் புதுவது போர்த்த பொன்போற் பச்சை வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால |
30 |
மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக் |
35 |
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின் வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ் |
அருப்பம் என்பது மக்கள் செல்லாத அருகிய இடங்கள். பாண! அருப்பத்தில் நீங்கள் செல்லக் கூடாது. மக்களின் கால்தடம் பதிந்த இயவு வழிகளிலேயே செல்ல வேண்டும். பேரியாழின் உறுப்புக்கள் திவவு - முறுக்கிய வளையல்போல் இருக்கும். கேள்வியாழ் - கடியப்படும் பகை நரம்புகளில் விரல் போகாமல் இசைத்துப் பழக்கப்பட்டது. நரம்பு - செம்மையாக முறுக்கப்பட்டுள்ளதால் குரலின் ஒலிபோல் இனிமையாக ஒலிக்கும். அரலை - அரற்றும் ஒலி தராதது. துளை - நரம்பு கோத்திருக்கும் துளை. இது வரகு அரிசி போல் இருக்கும். பத்தல் - இங்கிருந்துதான் மலையின் எதிரொலி போல் யாழின் மிழலை எதிரொலிக்கும். ஆணி - புதிய வெண்ணரம்புகள் ஆணியில் கட்டித் துளையில் முடுக்கப்பட்டிருக்கும். பச்சை - பத்தலுக்குத் தீட்டப்பட்ட இலை வண்ணம். உந்தி - மணம் கமழும் கூந்தல் இரு பிளவாய் மார்பில் விழும். மடந்தையின் கொப்புளில் அழகுடன் மயிர் ஒழுகியிருப்பது போன்ற வரைவுகளுடன் இரு பிளவாய்க் கிடக்கும் யாழின் வயிறு. மாமை - காதல் பருவத்தில் பெண்கள் மேனியில் தோன்றும் பொன் நிறம். இது பொன்னை அரத்தால் அராவும்போது உதிர்ந்த துகள்போல் அழகு தரும் நீர்மை பட்டுக் கிடக்கும். யாழிலும் இப்படிப்பட்ட அழகமைப்பு தீட்டப்பட்டிருந்தது. உரு - களாப்பழம் போன்ற கருமையால் பளபளக்கும் பாங்கினைக் கொண்டிருந்தது. பெண்ணின் இந்தப் பளபளப்புப் பொலிவை யாழும் கொண்டிருந்தது. அது பேரியாழ். பேரியாழ் வளைந்து நிமிர்ந்த கொம்பு போன்றது. யாழிசை : சீறியாழின் இசை - இன்பத்தில் தோய்த்துக் கேட்போரை மயக்கும். பேரியாழின் உயிர்ப்பிசை எழுச்சியூட்டும்.
பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல்
அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத் துறைபல முற்றிய பைதீர் பாணரொட |
40 |
உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின் |
பேரியாழ்ப் பாணரோடு அவர்களின் தலைவன் உயர்ந்தோங்கிய மலையில் ஏறுகிறான். யாழை இசைத்துக்கொண்டே களைப்புத் துன்பம் தெரியாமல் பாணர் கூட்டம் ஏறுகிறது. அவர்களிடம் இசைச் செல்வம் இருந்தது. அதனை அவர்கள் அருள்தரும் பாங்கில் அள்ளி வழங்குவார்கள். அமைந்த விருப்பத்தோடு பண்ணிசைத்து வழங்குவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, இருக்கும், கானவர், மலைபடுகடாம், பேரியாழ், இலக்கியங்கள், முழவு, தரும், வைத்திருக்கும், துன்பம், கூத்தர், தன்ன, பேரியாழின், பத்துப்பாட்டு, அரலை, வைத்தது, உங்களுக்குத், அருப்பம், திரியாது, யாழின், கிடக்கும், கொண்டிருந்தது, வழங்குவார்கள், போல், துளை, புதுவது, பச்சை, நீங்கள், நரம்பு, பத்தல், கோலால், கடுப்ப, பாணன், பாடலடி, எல்லரி, தட்டை, சங்க, பாண்டில், இசைக், கலப்பை, குழல், ஒலிக்கும், தொடுத்த, கொம்பு, ஆகுளி, என்னும், இவற்றை, துணைபுணர்