மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நூல்
இயற்கை வளம்
ஓங்கு திரை வியன் பரப்பின் ஒலி முந்நீர் வரம் பாகத் தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறிய வியன் ஞாலத்து வல மாதிரத்தான் வளி கொட்ப |
5 |
விய னாண்மீ னெறி யொழுகப் பகற் செய்யும் செஞ் ஞாயிறும் இரவுச் செய்யும் வெண் திங்களும் மை தீர்ந்து கிளர்ந்து விளங்க மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத் |
10 |
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த |
செயற்கைச் செழிப்பு நிலை
நோ யிகந்து நோக்கு விளங்க |
பொங்கி அலைவீசும் பரப்பினைக் கொண்டது கடல். அதனை எல்லையாகக் கொண்ட ஞாலத்தில் தேன்கூடுகள் தொங்கும் உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலைகள் தோன்றியுள்ளன. வானப் பெருவெளியில் காற்று வலிமையுடன் சுழன்று கொண்டுள்ளது. எல்லாவற்றையும் விடப் பெரிதாக அகன்றுள்ள விண்மீன்கள் தத்தம் வழியில் செல்கின்றன. பகலில் ஒளிதரும் ஞாயிறு இரவில் ஒளிதரும் திங்கள் ஆகிய இரண்டும் மயக்கமின்றித் தோன்றி ஒளிர்கின்றன. மழை பொழிந்தது. மாநிலம் கொழுத்துள்ளது. ஒன்று விதைத்தால் அது ஆயிரமாக விளைகிறது. விதைத்த நிலமும் விதைக்காத மரங்களும் நல்ல பலனைத் தருகின்றன. இப்படி இயற்கை உதவுவதால் மக்களின் நோக்கத்திலும் துன்பத்தைக் காண முடியவில்லை. யாரும் துன்பம் செய்யவில்லை.
மே தக மிகப் பொலிந்த ஓங்கு நிலை வயக் களிறு |
15 |
கண்டு தண்டாக் கட்கின் பத்து உண்டு தண்டா மிகுவளத் தான் உயர் பூரிம விழுத் தெருவிற் பொய் யறியா வாய்மொழி யாற் புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு |
20 |
நல் லூழி அடிப் படரப் பல் வெள்ளம் மீக் கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக |
கண்டு மாளாத களிறு. அக் களிறு உண்டு மாளாத வளம். தெருவெங்கும் பூரிப்பு. பொய் பேசத் தெரியாமல் உண்மையே பேசும் மக்கள். அவர்கள் உலகம் புகழும் நன்மக்கள். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நல்ல ஊழிக்காலம் வெள்ளம் என்னும் எண்ணளவினைக் கொண்ட ஊழிக்காலம். மக்கள் தன் காலடியைப் பற்றிக்கொண்டு பின்தொடரும்படி வெள்ளம் (கோடி கோடி) ஆண்டுகள். கோடிகோடி (1021) ஆண்டுகள் ஆண்டுவந்த பாண்டியரின் வழித்தோன்றலாக விளங்கும் மருகனே! (தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே!)
அகத்தியரின் வழிவந்த சான்றோன்
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை |
25 |
யொலியிமிழ் துணங்கைச் சீர்ப் பிணை யூபம் எழுந் தாட அஞ்சு வந்த போர்க்களத் தான் ஆண் டலை அணங் கடுப்பின் வய வேந்தர் ஒண் குருதி |
30 |
சினத் தீயிற் பெயர்பு பொங்கத் தெற லருங் கடுந் துப்பின் விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின் தொடித் தோட்கை துடுப் பாக ஆ டுற்ற ஊன் சோறு |
35 |
நெறி யறிந்த கடிவா லுவன் அடி யொதுங்கிப் பிற் பெயராப் படை யோர்க்கு முரு கயர அமர் கடக்கும் வியன் றானைத் தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின |
40 |
தொல்முது கடவுட் பின்னர் மேய வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந |
(பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றால மலைப் போரில் வென்று அதனைத் தனதாக்கிக் கொண்டான். அங்கு நடைபெற்ற போர் இப்பகுதியில் பேசப்படுகிறது) வரைதாழ் அருவி என்பது குற்றாலம். அங்கு இக்காலத்தில் உள்ள இரத்தின சபையில் தென்திசை நோக்கிக் கூத்தாடுபவர் தென்திசைக் கடவுள் (தட்சிணாமூர்த்தி). தென்திசைக் கடவுளைத் ‘தென்னவன்’ என்றனர். தென்னவனைத் ‘தொன்முது கடவுள்’ எனவும் வழங்கினர். (குற்றாலம் பொதியமலையின் ஒரு பகுதி. இப்பகுதியை வள்ளல் ஆய் ஆண்டு வந்தான் என்பதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன) பிற்காலத்துப் பரணி நூல்கள் போர்க்களக் காட்சியைப் பாடும்போது பிணத்தைப் பேய்க்கூட்டம் சோறாக்கித் தின்றதாகப் பாடுகின்றன. அவற்றிற்கு முன்னோடி போல அமைந்துள்ளது இந்தப் பாடல் பகுதி. பிணமாகிய களிறுகளைக் குவித்துப் கொழுப்பை எடுத்துப் பேய்க்கூட்டம் வாயில் அதவியது. பின்னர் தோளில் கை கோத்துக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்று விழுந்து தூண் போல் நின்று போர்க்களத்தில் துணங்கைக் கூத்து ஆடியது. ஆண்களின் தலைகளைக் கல்லாக வைத்து அடுப்புக் கூட்டியது. அரசர்களின் குருதியை உலைநீராக ஊற்றியது. அரசர்களின் சினத்தைத் தீயாக மூட்டியது. வலிமை மிக்க அவர்களின் கைகளை முறித்துத் துடுப்பாக்கிக்கொண்டு சோற்றைத் துளாவியது. பிணக் கறி போட்டுச் சோறு சமைத்தது.. சமையல் தொழிலில் வல்ல வாலுவன் விலகிச் சென்றுவிட்டான். இது படையினரை ஆட்டுவிக்கும் ‘முருகு’ ஆட்ட விழா. இப்படிப் போரிட்டு, தென்னவன் பெயர் கொண்ட கடவுளின் அருவி பாயும் நாட்டை இந்தச் செழியன் தனதாக்கிக்கொண்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி, கொண்ட, இலக்கியங்கள், வெள்ளம், மக்கள், வியன், களிறு, பத்துப்பாட்டு, பாண்டியன், ஆண்டுகள், பிணக், கோடி, ஊழிக்காலம், பின்னர், மாளாத, அருவி, பேய்க்கூட்டம், அரசர்களின், பகுதி, தென்திசைக், உலகம், குற்றாலம், அங்கு, தான், விளங்க, நிலை, செய்யும், உயர், வளம், ஓங்கு, தலையாலங்கானத்துச், ஒளிதரும், உண்டு, இயற்கை, கண்டு, நூல்கள், ஒன்று, நல்ல, சங்க