திருக்குறள் - 45.பெரியாரைத் துணைக் கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். |
441 |
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். |
442 |
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். |
443 |
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாந் தலை. |
444 |
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். |
445 |
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செய்க்கிடந்த தில். |
446 |
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தன்மை யவர். |
447 |
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். |
448 |
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை. |
449 |
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். |
450 |
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 45.பெரியாரைத் துணைக் கோடல் , இல்லை, பெரியாரின், இலக்கியங்கள், கொளல், ஆராய்ந்து, வேண்டும், கோடல், பெரியாரைத், துணைக், துணை, திருக்குறள், கொண்டு, பகைவர், அறிவுரைக், இல்லாத, கூறும், ஊதியம், கடிந்து, போற்றி, சங்க, கீழ்க்கணக்கு, பதினெண், கொள்ள, நீக்கி, எல்லாவற்றிலும், தமக்குச், பெரியாரைப், தக்க