திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர! நொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம் தந்தாயும் நீயே தரவந்த நன்னலம் கொண்டாயும் நீஆயக் கால். |
36 |
செந்தாமரைகள் மலராநின்ற செய்யப்பட்ட வயல்களையுடைய நல்லூர! நீ செய்த பிழைகட்கு நொந்தால் நின்னைச் செய்யப்படுவ தென்னுள்ளதாம்? என்றோழி நலத்தைத் தந்தாயு நீயே; தரவந்த நன்னலத்தைக் கொண்டாயும் நீயேயாயினால்
பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள் நெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள் எல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல நல்லஅருள் நாட்டம்இ லேம். |
37 |
பல பொழுதும் வந்து பயின்று சொல்லற்க; பாணனே! கேட்பாயாக; நெற் செறிந்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னாளின்கண்ணும் எல்வளையம் மென்றோளேம்; எங்கையர் தம்மைப்போல நல்ல மடந்தையருள் வைத்து அவனாலெண்ணப்பட்டிலேம்.
நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண! சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீ எல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல் சொல்லுமவர் வண்ணம் சோர்வு. |
38 |
நல்ல வயலூரனுடைய நன்மை யெல்லாம் நாங்களே அறிந்து உரைக்க வல்லேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேண்டா; இனி ஒழிவாயாக; நிறமிக்க நன் முல்லைமாலை சேர்ந்த இருங்கூந்தலையுடைய பரத்தையே சொல்லா நின்றாள்; தன் மாட்டவர் காதலித்த வண்ணத்தையும், எம்மாட்டுள்ள அவரது இகழ்ச்சியையும்.
கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம் பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன் விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான் கரும்பின்கோ(து) ஆயினேம் யாம். |
39 |
பெருங்கயத்த இடத்தின்கட் செறிந்த நீலங்களைப் பெரும்புறத்தினையுடைய வாளைப்பெடைகள் கதுவுகின்ற ஊரன் எம்மை விரும்பின நாட்போலான்; எம்முடைய வியனலத்தை முன்னே யுண்டான்; ஆதலான் இப்பொழுது கரும்பின் கோதுபோலவாயினேம்.
ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும் தீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும் தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் தாமரை தன்ஐயர் பூ. |
40 |
ஆம்பலாற் செய்யப்பட்ட அணித் தழையும் ஆரமும் அல்குலின்கண்ணும், முலையின்கண்ணும் அசைந்து வருகின்ற தீம்புனலூரன் மகள் இவள் இவ்வூரின்கண் ஆய்ந்த நறுமலர் நீலம் பெண்பால் கட்டிச் சூடும் பூமாலை செறிந்த மலர்த் தாமரை மாலை அவள் ஐயன்மார்க்குச் சூடும் பூவாதலால், நீயும் தாமரை மாலையைச் சூடி வருவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், ஊரன், செறிந்த, திணைமொழி, நீலம், தாமரை, ஐம்பது, கீழ்க்கணக்கு, பதினெண், நல்ல, பயின்றுரைக்க, வேண்டா, சூடும், செய்யப்பட்ட, நீயே, நல்லூர, சங்க, தரவந்த, கொண்டாயும், எங்கையர், வந்து, பாணனே