பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னே அயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால் கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவே சிறு குரங்கின் கையால் துழா. |
306 |
இயல்பாக வுள்ள (தனது) பகையை வெல்ல நினைப்பவன் தனக்கு அரணாகுமாறு முன்னரே (தன் பகைக்கு) மற்றொருவனைப் பகைவனாகுமாறு தூண்டுதல் செய்து ஒரு நெறியால் கோபத்தின்கண் மிக்கொழுகித் தன் கைக்கு எளிதாமாறு பகையை நெருக்குக அச் செயல் பெரிய குரங்கு சிறிய குரங்கின் கையால் துழாவியசெயலை ஒக்கும்.
கருத்து: பகைவரை அவர்க்கு மாறாக மற்றொருவரை உண்டாக்கி வெல்க என்றது இது.
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால், மற்றவர்க்கு ஆற்றும் பகையால் அவர்க் களைய வேண்டுமே, வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான் நூற்றுவரைக் கொண்டுவிடும். |
307 |
மனவேறுபாடு எத்திறத்தார்க்கும் உண்டு ஆகலானும் அவ் வேறுபாட்டால் ஒருவர் கூறியவற்றை அவர்க்குத் துணைபுரிவார் தஞ் சொற்களால் மாறு கொண்டு உடைக்கவல்ல ராதலானும் தம் பகைவர்க்கு தம்மோடு மாறுபாடு கொண்டொழுகும் துணையாய் வந்த பகைவராலேயே அவரைக் களைந் தெறிதல் வேண்டும்; ஆற்றுவான் நூற்றுவரை கொன்றுவிடும் - அங்ஙனம் கொல்லவல்லா னொருவனே நூறு பகைவர்களைக் கொல்லவல்லனாம்.
கருத்து: தம் பகைவர்களுக்குள் மன வேறுபாடு உண்டாகுமாறு செய்து ஒருவரை ஒருவரால் களைகஎன்பது.
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே; கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ, முள்ளினால் முள் களையும் ஆறு. |
308 |
ஆராய்ந்து அறியும் ஆற்றலுடையார் தம் பகைவரிடத்து வாழும் உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் வலிமையைப் பெறுதலேயாம்; கள்ளினால் கள் அறுத்தல் காண்டும் - மற்றொரு வேறுபட்ட கள்ளினால் முன் குடித்த கள்ளின் வெறியை நீக்குதலைக் கண்கூடாகக் காண்கின்றோம்; அது - உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் முள்ளினால் முள்ளைக் களைதலையொக்குமன்றோ?
கருத்து: பகைவரிடத்து உட்பகையாய் வாழ்வாரைத் துணையாகப் பெறின் வெற்றி எளிதில் எய்தலா மென்றது இது.
நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால், மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,- பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!- ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு. |
309 |
பூக்கள் என்று பிழையாகக் கருதி வண்டுகள் மருங்கு வந்து அணைந்து ஆடும் கண்களையுடையாய்! ஒருவர் நாள்தோறும் நலிதலைச் செய்து பகைவரை அடும்பொருட்டுப் புகுந்தால் மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு உயிர்மெலிந்து ஒருவரும் இறந்த வீழாமையைக் கண்டு அச்சம் மிகுந்து அவரை அடைக்கலமாக அடைதல் அம்பினின்றும் பிழைத்துப் புறமுதுகிட்டுத் தன்னைக் காத்துக்கொள்ளுமாற்றை ஒக்கும்.
கருத்து: போரின்கண் புகுந்த பின்னர்ச் சரணாக அடைதல் இழிவைத் தருவதொன்றாகும்.
மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல், அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால் நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால், ஒடி எறியத் தீரா, பகை. |
310 |
கருதியதை மறைத்து வைக்காது இனிமையாக எடுத்துக்கூறுதல் மாட்சிமைமிக்க பொருளைக் கொடுத்தல் வஞ்சனை முதலியவற்றால் கீழறுத்து அவரைச் சார்ந்தாரைத் தம்மோடு சேர்த்துக்கொள்ளல் முறையாக நடுநிலைமையிற் சென்று அப்பகைவர்களை அறச்செய்தல் ஆகிய இவையல்லாமல் தண்டம் ஒன்றுகொண்டே பகையைஅறச்செய்ய அப்பகை தீர்தல் இல்லை.
கருத்து: பகைவரை நான்கு நெறியான் வயப்படுத்துக என்றது இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, ஒருவர், கருத்து, இலக்கியங்கள், செய்து, கண்டு, துணையாகப், அடைதல், பகைவரை, பெறுதல், கீழ்க்கணக்கு, பழமொழி, கள்ளினால், நானூறு, பதினெண், பகைவரிடத்து, உட்பகையாயினாரைத், வீழாமை, சென்று, அவரை, ஆடும், முள்ளினால், மெலிந்து, ஆற்றுவான், கையால், குரங்கின், கைக்கு, சங்க, பகையை, பகைக்கு, அறுத்தல், தம்மோடு, என்றது, ஒக்கும், காண்டும்