பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ, நாய் பெற்ற தெங்கம்பழம். |
216 |
முழங்குகின்ற அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக்கொட்டுகின்ற மலையை யுடையவனே! பிறர்க்கீதலும் தான் அடைதலும் முதலியன அறியாதான் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம் நாய்பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா?
கருத்து: ஈதல் துய்த்தல் இல்லாதான் பெற்ற மிகுந்த செல்வம் பயனின்றிக் கழியும்.
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும், 'இழவு' என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம், அழகொடு கண்ணின் இழவு. |
217 |
முழவு போன் றொலிக்கும் கடலாற்சூழப்பட்ட உலகமுழுதையும் ஆண்ட அரசர்கள் திருவிழா நடந்த ஊரில் ஆடிய கூத்தைப்போலப் பொலி வின்றி செல்வம் கெட்டொழிவதைப் பார்த்திருந்தும் நாமும்ஒருநாளில் இப் பொருளை இழந்து நிற்போம் என்று நினைத்து இரந்தவர்க்கு ஒருபொருளையும் கொடாதவனது செல்வம் வடிவும் அழகும் உடையா னொருவன் கண்ணிழந்து நிற்றலை யொக்கும்.
கருத்து:செல்வம் ஈகையின்றி விளங்குதலில்லை.
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண் துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்? |
218 |
நாவினால் ஒருபொருளை இரந்தாரது குறைவினை அறிந்து தம்மிடத்தில் உள்ள செல்வத்தை மாட்சிமைப்படக் கரத்தலைச் செய்வார் தீய செயல்களுக்கு அஞ்சினால் அவர்கள் அடையும் நன்மையாது? அஞ்சா தொழியின் அவர்கள் அடையும் தீமை யாது? பார்வை இல்லாத கண் மூடியிருந்தா லென்ன தீமை மூடியிராது திறந்திருந்தாலென்ன நன்மை?
கருத்து: இரப்பார்க்கு கரக்கும் தீவினையே ஏனைய அறங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் ஆற்றல் மிக்கது. தீவினையாயவற்றுள்ளும் தலை சிறந்தது.
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத் தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,- அடரும், பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய, மீ வேலி போக்குபவர். |
219 |
அடுத்து வருகின்ற பிறப்பிற்கு உதவும்படி ஒரு பொருளையும் கொடாராய் பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகின்ற தமது பற்றால் ஈதலுந் துய்த்தலுமுடைய பொருளை அதனால் தாமும் பிறரும் பயன் கொள்ளாதவாறு பயனின்றி வைத்துவிட்டு இறந்துபோவார்; அடரும் பொழுதின்கண் - பகைவர்களோடு போர் செய்யும் பொழுது குடர் சரிந்ததாக வேறொன்றினை உள்ளேயிட்டு மேலே கட்டுக்கட்டி வைத்திருப்பவரோடு ஒப்பர்.
கருத்து: அறிவிலார் பொருளால் தாமும் பிறரும் பயன் கொள்ளாதவாறு ஈட்டிவைத் திழப்பர்.
விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும், வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,- இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக் கரும் பனை அன்னது உடைத்து. |
220 |
பெரிய மூங்கிலாகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினையுடையாய் உணவிற்கு ஒன்றுமின்மையால் வருந்தி அறிமுகமுண்மையால் தன்னை விரும்பி வந்து அடைந்தவர்களுக்கும் தம் உறவினர்க்கும் அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காராகி புதிய அயலார்க்கு உதவி செய்தல் மிகவும் (தன்னைப் பாதுகாத்து ஓம்பினார்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனைபோலும் தன்மையை உடையது.
கருத்து: அறிவிலார் தமர் பசித்திருப்பப் பிறர்க்கீவர் இஃது அடாது என்பதாம். 'வருத்தும்' என்பது 'வருந்தும்' என எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, செல்வம், கருத்து, இலக்கியங்கள், நானூறு, பழமொழி, கீழ்க்கணக்கு, பதினெண், பெற்ற, வருகின்ற, பிறரும், பயன், தாமும், வருந்தும், வென்ற, குடர், விரும்பி, அறிவிலார், கொள்ளாதவாறு, அடையும், ஊரில், முழவு, உடைய, சங்க, இழவு, பொருளை, அடரும், பிறப்பிற்கு, தீமை, பொழுதின்கண்