பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

'எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை' என்று, ஒருவர் தங்கண் அழிவு தாம் செய்யற்க!- எங்கானும் நன்கு திரண்டு பெரயவாம், ஆற்றவும் முன் கை நெடியார்க்குத் தோள். |
156 |
எம்மிடத்து ஒரு பொருளும் இல்லை எமக்கோ சுற்றத்தாருமில்லை என்று நினைத்து ஒருவர் தம்மிடத்துவரும் பெருமையை அழிக்கக் கூடியனவற்றைச் செய்யாதொழிக எங்கே பிறந்தவர்க்காயினும் மிகவும் முன்கை நீளமாக உடையவர்கட்கு தோள்கள் மிகவும் திரட்சியுற்றுப் பெரியனவா யிருக்கும்.
கருத்து: பெருமையை அழித்தற் குரியனவற்றைத் தாம் செய்யாதிருக்கவேண்டும். அதனால் மிக்க புகழ்உண்டாகும்.
நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி, நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து, நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின், உலக்கைமேல் காக்கை என்பார். |
157 |
நிலத்தின்கண் வாழ்வதற்கு மிகுதியாகிய பெரிய செல்வத்தை விரும்பி நன்மை மிகுந்த அரசர்களுள் நல்லோர் ஒருவரை அடைந்து (அங்குத் தங்கியிராமல்) நிலத்து நிலைகொள்ளா காலர் - ஓரிடத்தும் தங்குதலைக் கொள்ளாத கால்களை உடையவர்கள் ஆராயுமிடத்து உலக்கை மேலுள்ள காக்கைஎன்று கூறப்படுவார்கள்.
கருத்து: அறிவிலார் ஒருவரிடத்திலும் ஒரு தொழிலிலும் நிலைபெறாது வருதலால்நன்மையைப் பெறமாட்டார்கள்.
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக்கொண்டு, கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது உக்கு ஓடிக் காட்டிவிடும். |
158 |
மேற்கொண்ட தமது செயலை தாம் சோம்பல் கொண்டு நடத்தி முடிக்கும் உறுதியைவிட்டு செருக்கில் மிகுந்து ஓடித்திரியின் தாம் மேற்கொண்ட அச்செயல் மிகவும் சிதைந்து தன்னைச் செய்வதாக மேற்கொண்டவனிடத்தில் தவ்வையைஅறிமுகப்படுத்தும்.
கருத்து:முயற்சி இல்லதானை மூதேவி அடைவாள்.
தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கல்லார், 'பின்னை, ஒருவரால் செய்வித்தும்' என்று இருத்தல்,- செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ, வெந்நீரும் ஆடாதார் தீ. |
159 |
பரந்து செல்கின்ற அருவியை உடைய மலைநாடனே! தம்மால் முடிக்கலான தொரு செயலை தாம்செய்து முடிக்கமாட்டாதவராய் பிறகு வேறொருவரால் செய்வித்துக் கொள்வோம் என்று சோம்பியிருத்தல் வெந்நீரினும் குளியாதார் தீயின்கண் பாய்வார்களோ? (இல்லை. அதுபோல அதுவுமில்லையாம்.)
கருத்து: தம்மால் முடியும் செயலைத் தாமேசெய்தல் வேண்டும்.
'முழுதுடன் முன்னே வகுத்தவன்' என்று, தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ, அல்லல்- இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம் எழுதினான் ஓலை பழுது. |
160 |
முழுதுலகத்தையும் முன்னே உண்டாக்கியவன் நமக்காக அல்லலையும் படைத்தான் என்று நினைத்து இஃது அவனாலேயே நீங்கும் போலுமென்று நினைத்து அவனையே தொழுதுகொண்டு முயற்சியின்றி யிருப்பின் துன்பம் நீங்குமோ? முன்னம் ஓலை பழுது எழுதினான் - முதலில் ஓலையைப் பழுதுபடஎழுதியவன் தாம் குற்றம் செய்தவனாக அறிந்தபின் செய்த குற்றத்தைப் பாதுகாப்பதில்லை. (உடனேநீக்குவன் என்பதாம்.)
கருத்து: துன்பம் தெய்வத்தால் வந்ததாயினும் அதனைநீக்க முயற்சி செய்க.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, தாம், கருத்து, இல்லை, இலக்கியங்கள், பழமொழி, தம்மால், நினைத்து, மிகவும், நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், முன்னே, துன்பம், முன்னம், எழுதினான், முயற்சி, பழுது, மேற்கொண்ட, பெருமையை, சங்க, நிலத்து, கடைப்பிடி, ஒருவர், செயலை