பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

"உரை முடிவு காணான்; இளமையோன்!" என்ற நரை முது மக்கள் உவப்ப-நரை முடித்து, சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை கல்லாமல் பாகம் படும். |
6 |
வழக்கினது முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன் சிறுவயதினன் என்றிகழ்ந்த நரைமயிருள்ள முதியோர் இருவரும் மகிழும்படி நரைமயிரை முடியின்கண் முடித்து வந்து (அவர்கள் கூறிய) சொற்களைக் கொண்டே நீதி கூறினான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன் தத்தம் குலத்திற்குரிய அறிவு அந்நூல்களைக் கல்லாமலே இனிதுஅமையும்.
கருத்து: குலவித்தைகல்லாமலே அமையும்.
புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்க பூம் புனல் ஊர்!-பொது மக்கட்கு ஆகாதே; பாம்பு அறியும் பாம்பின கால். |
7 |
நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையன. அதுபோல் அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம் (அவர்கள் போன்ற) அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும் கல்வியறிவில்லாதவர்களுக்கு விளங்காது.
கருத்து: கற்றோர் பெருமையைக்கற்றோர் அறிவார்.
நல்லார் நலத்தை உணரின், அவரினும் நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்ல மயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும், அயிலாலே போழ்ப, அயில். |
8 |
கண்களுக்கினிய மயில்கள் (தோகையை விரித்து ஓகையொடு) நடமாடும் சிறந்த மலைநாட்டை யுடையவனே! எக்காலத்தும். அயில் அயிலாலே போழ்ப - இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பர் - (அதுபோல) கற்றவாறமைந்த நற்குணமுடையோர்களது அறிவின் நன்மையை அறிவதாயின் அவர்களைவிடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள் கல்வி ஒன்றே உடையஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.
கருத்து: நல்லார்அறிவினை அவரினும் நல்லாரே அறிவர்.
கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்ற அறை கல் அருவி அணி மலை நாட! நிறை குடம் நீர் தளும்பல் இல். |
9 |
பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை யுடையவனே! நீர் நிறைந்த குடம் ஆரவாரித் தலைதல் இல்லை நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார் மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.
கருத்து: கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்துபேசமாட்டார்கள்.
விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார், கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி, பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,- மதிப்புறத்துப் பட்ட மறு. |
10 |
நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்விற்கும் வேறுபாடு இல்லாதவர்கள் மாறுபட்டு எழுந்தோர்களுடைய நூலின் கொள்கைகளைத் தம் வன்மையால் வென்று தலைமைப் பேறுற வாழ்கின்ற அறிஞர்கள் இகழ்தற்குரிய செயல்களைச் செய்தல் திங்களின்கண் இலங்கும் களங்கம் போல் விளங்கித்தோன்றும்.
கருத்து: அறிவுடையோர் மாசுற்ற செயல்களைச் செய்வாராயின் அதுதேசுற்றுத் தோன்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், அறியாதார், பழமொழி, கல்வி, நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, குடம், நீர், புகழ்ந்து, கற்று, யுடையவனே, உண்மையையும், செய்தல், செயல்களைச், பட்ட, மலைநாட்டை, நூல், தமது, அவரினும், சோழன், அறிவு, முடித்து, ", சங்க, புலம், மிக்க, அயிலாலே, போழ்ப, நல்ல, நல்லார், அறிவிற், அயில்