பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின், அமராததனை அகற்றலே வேண்டும்;- அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை, தமவேனும், கொள்ளாக் கலம். |
66 |
மூங்கில்கள் நிறைந்த மலை நாடனே! தமக்குத் தகாத பொற்கலன்கள் தம்முடையதாயினும் அவற்றைக்கொண்டு தம்மை அணிபெறச் செய்யார் மக்கள் தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு நீக்குதலையே ஒருவன் விரும்புதல்வேண்டும்.
கருத்து: தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையைஏற்றல் கூடாது.
தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி, வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்- நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல். |
67 |
பெற்ற தாயாலேயாயினும் (அன்றித்) தந்தையாலேயாயினும் மிகுத்துக் கூறப்படுதல் இல்லாது தாமே தம் வாயால் உயர்த்திக் கூறிக்கொள்பவர்களை பிறர் புகழ்ந்து கூறுதல் துன்பம் இல்லையாயினும் அடுப்பின் பக்கலில் முடங்கியிருக்கும் நாயைப் புலி யென்று கூறுதலோ டொக்கும்.
கருத்து: தற்புகழ்ச்சிஉடையாரைப் புகழ்தல் கூடாது.
பல் கிளையுள் பார்த்துறான் ஆகி, ஒருவனை நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின், உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல், நிரையுள்ளே இன்னா, வரைவு. |
68 |
நெருங்கிய பல சுற்றத்தார் நடுவே ஆராய்ந்தறிதல் இல்லாதவனாகி தமது கிளையுள் ஒருவனை அவனது வறுமை காரணமாக வேறுபட நினைந்து நன்றாக ஆராய்தலில்லாதவனாக ஒன்றைக் கூறின் சொற்களுள் நல்ல சொற்களைச் சொல்லாதவனாக ஆதல்போல பத்தியாய்க் குழுமியிருந்த கூட்டத்தில் ஒருவனை வரைந்து சிறப்புச் செய்தலும் இன்னாது.
கருத்து: கூட்டத்தில் ஒருவனை இழித்துப் பேசுதலும் ஒருவனை உயர்த்திப் பேசுதலும்தீதாம்.
10. சான்றோர் இயல்பு
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல், வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித் தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி, நூறாயிரவர்க்கு நேர். |
69 |
சிறப்புப்படத் தோன்றும் ஒளியை யுடைத்தாய் நீரிலே படிந்தாலும் ஒட்டாத ஒப்பற்ற இரத்தினத்தைப்போல் தாற்றப்பட்டதாயினும் தலைமகனுடைய பெருமை நூறுஆயிரவர்கட்கு ஒப்பாகும்.
கருத்து: அறிவுடையார் பெருமைமறைக்க மறைபடாது.
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர் நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால் தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும், புல் மேயாது ஆகும், புலி. |
70 |
பஞ்சத்தால் புலியானது தன்னிடத்து வருத்தும் பசி மிக்கு வருந்தியதானாலும் புல்லினை மேயா தொழியும் அறிஞர்கள் ஒற்கம் தாம் உற்ற இடத்தும் - வறுமையைத் தாம் அடைந்த இடத்தும் தாம் முன்பு இருந்த நிலையிலேயே நிற்பார்கள்.
கருத்து: பெரியோர்வறியராயினும் தம் நிலையினின்றும் திறம்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, ஒருவனை, தாம், இலக்கியங்கள், பழமொழி, புகழ்ந்து, நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, இடத்தும், கிளையுள், கூட்டத்தில், தோன்றும், ஒற்கம், உற்ற, கூடாது, தம்மைப், சங்க, தம்மை, தமக்குப், நாயைப், அடுப்பின், புலி