பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

நெடியது காண்கலாய்; நீ ஒளியை நெஞ்சே! கொடியது கூறினாய் மன்ற;-அடியுளே, முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு பிற்பகல் கண்டுவிடும். |
46 |
நெஞ்சே! தீய செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய். (ஆதலால்)நீ யெளியை - நீ அறிவு இல்லாதாய் (பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங்காலத்திற்குப் பின் அறியாய் அந்த நிலையிலே பிறன் ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற்பகுதிக்கண் செய்தான் தனக்கு வரும்தீங்கினைப் பகலின் பிற்பகுதிக்கண் தப்பாமல்அடைவான்.
கருத்து: முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
'தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்; மாற்றத்தால் செற்றார்' என, வலியார் ஆட்டியக்கால், ஆற்றாது அவர் அழத கண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும். |
47 |
குடிப்பிறப்பால் தீய செயல்களை யுடையவர் ஒரு துணையும் இல்லாதவர் வறுமையுடையார் சொற்களால் பகைவரை ஒத்தார் என்றிங்ஙனம் நினைத்து குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவையிலாரை நலிந்த இடத்து தாங்க இயலாது அவர்கள் தங்கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும்.
கருத்து: எளியார் அழுத கண்ணீர் அவர்தம்மை நலிந்தார்க்குக் கூற்றாய் முடியும்.
'மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரை ஒற்கப்பட முயறும்' என்றல் இழுக்கு ஆகும்;- நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல் கல் கிள்ளி, கை உயர்ந்தார் இல். |
48 |
விளங்குகின்ற மலைமேல் உள்ள கல்லைக் கிள்ளுதலைச் செய்து கை வருந்துதலைத் தப்பினார் இல்லை செல்வம் மிக உடையவர்களாகி அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டாரை அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என்று நினைத்தல் மிகவும் எளிமையானாலும். இழுக்கு ஆகும் - செயலிற் செய்தால் மிக்கதுன்பமே உண்டாகும்.
கருத்து: அறிவுசெல்வம் என்றிவை உடையாரைத் துன்புறுத்தலாகாது.
நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின், கூர்ந்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;- பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின், பேர்த்து நாய் கவ்வினார் இல். |
49 |
நாய் சினந்து கவ்விய இடத்து ஆராய்ந்து ஓடிப் பின்சென்று மீண்டும் நாயினைக் கவ்வித் துன்புறுத்தினவர்கள் ஒருவரும் இலர் நல்ல நேர்மையான குணங்களில்லாதவர்கள் அறிவு நிரம்பாமையால் தம்மைத் துன்புறுத்துவராயின் மன ஊக்கங்கொண்டு அவர்களைத் தாம்துன்புறுத்துதல் அறிவு சான்றவர்க்குக் கொள்கையன்று.
கருத்து: அறிவிலார் தீங்கு செய்தாராயின் அதைப் பொருட்படுத்திப் பெரியோர்தீங்கு செய்யமாட்டார்கள்.
காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர் உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல். |
50 |
உரம்பெற்ற முத்துமாலையையணிந்த மார்பை உடையவனே! குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள் இயல்பாகச் செய்த தீங்கினை உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட்கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல் சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக்கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடொக்கும்.
கருத்து: கீழோர் தவறுசெய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்யமுயலார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், தீங்கு, நானூறு, நாய், அறிவு, பழமொழி, கீழ்க்கணக்கு, பதினெண், பிறந்தவர்கள், இழுக்கு, கூற்றாய், இடத்து, ஆகும், மிகவும், செய்த, நல்ல, நலிந்த, குடியிற், அவர்க்குக், பிற்பகல், கேடு, பிறன், முற்பகல், நெஞ்சே, சங்க, கூறினாய், கண்ணீர், துணை, பகலின், செல்வம்