நாலடியார் - 20.தாளாண்மை

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப; வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க்கு உண்டோ தவறு? |
191 |
நீரை மிகுதியாகக் கொள்ளாத ஏரியின் கீழ் உள்ள பயிரைப் போல (ஒரு முயற்சியுமின்றி) சிலர், தம் உறவினர் தருவதை உண்டு (அவ்வுறவினர்) வறுமையுற்றபோது வேறு வழியின்றிச் சாவர். ஆனால் வாளின் மேல் கூத்தாடும் மகளிருடைய கண்ணைப் போல் இயங்கி, ஓடி ஆடிச் சுறுசுறுப்பாக உழைக்கும் முயற்சியுடையார்க்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ?
ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்; வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான் தாழ்வின்றித் தன்னைச் செயின். |
192 |
அசையும் கொம்பாகி வழியில் நின்ற இளமரமும் வயிரம் கொண்டு உறுதி வாய்ந்த பொ¢ய மரமாக வளர்ந்த பின்னர், ஆண் யானையைக் கட்டும் தறியாகும். அதுபோல, ஒருவன் தன்னைத் தாழ்ந்த நிலையில் இல்லாமல் முயற்சி செய்தால், அவனுடைய வாழ்வும் அப்படிப்பட்ட பெருமை உடையதாகும்.
உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால் கால்தொழில் என்று கருதற்க கையினால் மேல் தொழிலும் ஆங்கே மிகும். |
193 |
வலிமை பொருந்திய புலியும் தனக்குரிய இறைச்சியுணவு ஒரு நாள் கிடைக்கவில்லையெனில் சிறிய தேரையைப் பிடித்துத் தின்னும்,ஆதலால் அறிவினால் ஆராய்ந்து எந்தச் சிறிய தொழிலையும் அற்பமான தொழில் என்று எண்ணவேண்டா அந்த அற்பமான தொழிலே முயற்சியால் உயர்ந்த தொழிலாக மேம்படும். (தொழில் சிறியதாயினும் அக்கறையுடன் செய்தால் உயர்வு கிடைக்கும் என்பதாம்).
இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால் அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால் கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப! பெண்டிரும் வாழாரோ மற்று. |
194 |
தாழையை அலைகள் அசைத்தற்கிடமான சோலைகள் சூழ்ந்த கடற்கரையையுடைய வேந்தனே! மேற்கொண்ட ஒரு செயல் எளிதில் முடியாததாயிருப்பினும், தளராது முயன்று செய்வதே ஆண்மையாகும். எடுத்த காரியம் எளிதில் முடியுமானால் மென்மைத் தன்மை வாய்ந்த மகளிரும் அதனை முடித்துப் பெருமையடைய மாட்டார்களா? (எளிதான செயலை யாவரும் முடிப்பர்; அதில் பெருமை இல்லை. கடினமான செயலை மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது, இடைவிடாது செய்து முடிப்பதே ஆண்மையின் பெருமையாம்).
நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம். |
195 |
நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும். (ஒன்றோ என்பதனை ஒண்பொருள் ஒன்று, தவம் ஒன்று, கல்வி ஒன்று, ள்வினை ஒன்று எனக் கூட்டுக).
ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம் உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார் குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு. |
196 |
தாம் மேற்கொண்ட செயலை, அது முடியும்வரை அறிவின் திறத்தால் மனத்துள் அடக்கிக் கொண்டு, தமது முயற்சியினை வெளிப்படையாக உரையார் அறிவுடையார். மேலும் அவர்கள், பிறர் முயற்சியினை அவர்தம் உறுப்புகளின் குறிப்பினால் ஆராய்ந்து அறிவர். இத்தகையோர்க் கீழ் அடங்கும் உலகு. (அவர்க் கீழ் உலகம் அடங்கும் என்பது அவரது ஆற்றலை வியந்து கூறியதாம்).
சிதலை தினப்பட்ட ஆலமரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். |
197 |
கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தினை அதன் விழுது தூணாக நின்று தாங்குவது போல, தந்தையிடம் முதுமையினால் தளர்ச்சி உண்டாகும்போது, அவன் பெற்றமகன் முன் வந்து பாதுகாக்க, தந்தையின் தளர்ச்சி நீங்கும். (ஒவ்வொருவரும் தமது குடி தாழாதிருக்க முயலல் வேண்டும் என்பது கருத்து).
ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும் மானம் தலைவருவ செய்யவோ? - யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகை அவர். |
198 |
யானையின் புள்ளிகள் பொருந்திய முகத்தைத் தாக்கிப் புண்படுத்தவல்ல கூர்மையான நகங்களையும், வலிமையான கால்களையும் உடைய சிங்கத்தைப் போன்ற வலிமையுடையோர், வறுமையுற்று நிலைதாழ்ந்த போதும் மானம் கெடத்தக்க செயலைச் செய்வரோ? செய்யார்.
தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை. |
199 |
இனிய கரும்பு ஈன்ற, திரண்ட காம்பினையுடைய, குதிரையின் பிடா¢ மயிர்போல் கற்றையான பூவானது, நறுமணத்தை இழந்ததுபோல, ஒருவனிடம் தன்பெயரை நிலைநாட்டும் பெருமுயற்சி இல்லாதபோது, அவன் மிகச் சிறந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாகும்?
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும். |
200 |
முயற்சியற்ற கீழ்மக்கள் பெருமுத்தரையர் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற செல்வர் மகிழ்ந்து தரும் கறிகளோடு கூடிய உணவை உண்டு மகிழ்வர். கறியின் பேரையும் அறியாத மேலோர் தாம் மிகவும் விரும்பிச் செய்த முயற்சியால் வந்தது நீர் உணவாயினும் அதனை அமிழ்தமாக உண்பர். (தமது முயற்சியால் வருவது கூழ் நீராயினும் அமிழ்தமாம்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாலடியார் - 20.தாளாண்மை , இலக்கியங்கள், தாளாண்மை, குலம், ஒன்று, முயற்சியால், தமது, கீழ், நல்ல, செயலை, நாலடியார், என்றும், பொருளும், ஆகும், ஒன்றோ, ஒண்பொருள், என்னும், உரையார், என்பது, தளர்ச்சி, அவன், மானம், அடங்கும், முயற்சியினை, குலமென்றும், உலகு, தாம், ஊக்கம், எளிதில், மேல், கொண்டு, வாய்ந்த, உண்டு, கல்வி, பதினெண், கீழ்க்கணக்கு, சங்க, செய்தால், பெருமை, அற்பமான, தொழில், மேற்கொண்ட, ஆராய்ந்து, சிறிய, தின்னும், அறிவினால், பொருந்திய, இல்லை