நாலடியார் - 12.மெய்ம்மை
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து. |
111 |
வா¢சையாக வளையலை அணிந்தவளே! தம்மால் தர முடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறுதல் யார்க்கும் பழியாகாது. அ·து உலகில் இயற்கை. ஆனால், ஏற்பவன் ஆசை கெடும்படி பல நாட்கள் கழித்து இல்லையென்று சொல்லுதல் செய்ந்நன்றி மறந்தவா¢ன் குற்றத்தைப் போன்ற குற்றமாகும். ('தருகிறேன். தருகிறேன்' என்பவன் வள்ளல் தன்மையில் இருப்பது போல இரப்பவனை நம்பச் செய்து, நன்றிக்குரியவனாக இருந்துபின் பொய்த்தல் செய்ந்நன்றி கொன்றதற்கு இணையான குற்றம் என்பதாம்).
தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு. |
112 |
சான்றோரும், சான்றோர் அல்லாதாரும் தத்தம் குணங்களில் எப்போதும் குறையாமல் இருப்பர். வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்கும். (தக்காரும் தகவிலாரும் தங்கள் தங்கள் இயல்பிலேயே என்றும் நிலைத்து நிற்பர். இ·து உலக இயல்பு).
காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர் - ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர். |
113 |
குளிர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! செல்வம் உண்டான காலத்தில் மேலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட நெருங்கிய உறவினர் பலராவர். தகாத, கொடிய வறுமையை ஒருவர் அடைவராயின், அப்போது, 'அவர் எம் உறவினர்' என்று உரிமை பாராட்டுவோர் ஒரு சிலரே ஆவர். (இதுவும் உலக இயல்பாகும்).
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து அடுவது போலும் துயர். |
114 |
குற்றமற்ற இந்த உலகத்தில் போற்றத்தக்க அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள் மூன்றனுள் நடுவில் உள்ள பொருளை ஒருவன் அடைந்தால் அவன், அதன் காரணமாக முதலில் உள்ள அறத்தையும், இறுதியில் உள்ள இன்பத்தையும் அடைவான். பொருளைப் பெறாதவன், கொல்லன் உலையிலிட்டு இரும்பைக் காய்ச்சுவதுபோல வறுமைத்துன்பமெய்தி வருந்துவான். (பொருள் உள்ளவன் அறம், இன்பம் ஆகிய இரண்டையும் பெறுவான். பொருள் இல்லாதவன் அறம் முதலான உயிர்ப் பண்புகளை இழந்து வருந்துவான்).
நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம் கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். |
115 |
உயர்ந்த சாதிப் பசுவின் கன்றாக இருந்தால் இளங்கன்றும் நல்ல விலை போகும். கல்லாரேயாயினும் செல்வரது வாயிலிருந்து வரும் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சிறிதே ஈரமுள்ள காலத்தில் உழுதலைப் போல, வறியவர் வாய்ச்சொல் மதிக்கப்படாது ஒழியும். (சிறிது ஈரத்தில் உழுதால் கொழு மேலே நிற்குமேயன்றி, உள்ளே செல்லாது. அதுபோல, வறியவனுடைய சொற்கள் மேலுக்குத் தலையசைத்துக் கேட்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா).
இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய். |
116 |
அகன்ற கண்களையுடையவளே! பேய்ச் சுரைக்காயை உப்புடன் நெய்யும், பாலும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. அதுபோல, மெய் அறிவை உணர்த்தும் நூல்களை மிக விரிவாக எக்காலமும் கற்றாலும் இயல்பாக அடக்கமில்லாதவர் எப்போதும் அடங்காமலே இருப்பர்.
தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க என்னை அவரோடு பட்டது - புன்னை விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப! உறற்பால யார்க்கும் உறும். |
117 |
புன்னையின் அழகிய பூமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த கடற்கரையையுடைய வேந்தனே! ஒரு காரணமும் இன்றித் தம்மை இகழ்ந்து பேசுபவரை, அவர் முன்னிலையிலேயே கடிந்து பேசிப் புறக்கணித்துவிட வேண்டும். அவருடைய தொடர்பால் வருவதென்ன? வருபவை ஊழால் வரும். (ஒரு காரணமும் இன்றிப் பழிப்பவரை அடக்கும் வழி அவர் எதிரிலேயே அவரைக் கண்டிப்பதுதான்; புறங்கூறிப் பயனில்லை என்பது கருத்து
ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. |
118 |
பசுக்கள் பல்வேறு நிறத்தனவாயினும் அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையதன்று; ஒரே நிறம் உடையதுதான். பாலைப் போல், அறப்பயனும் ஒரே தன்மை உடையதாகும். அவ்வறத்தை ஆற்றும் முறைகள், பசுக்களின் நிறங்களைப் போலப் பலவாகும்.
யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர் இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர் கடைபோக செல்வம்உய்த்தார்? 119 |
மனித வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு பழிச்சொல் இல்லாமல் வாழ்ந்தவர் யார்? ஒரு தொழில் இன்றி வாழ்ந்தவர் யார்? வாழ்நாளின் இடையே துன்பத்தை அடையாதவர் யார்? வாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அதனை அனுபவித்தவர் யார்?
தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றம் கொண்டுஓடும் பொழுது. |
120 |
எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் உயிருக்குத் துணையாக வருவது அவரவர் நல்வினைகளேயன்றி வேறில்லை. எமன் உயிரைக் கொண்டு செல்லும்போது, அதுவரை ஆடை அணிகளால் அழகுடன் பாதுகாத்த உடம்பும் உயிருக்குத் துணையாக வராது. (உடம்பும் வராது என்றதால், செல்வம் முதலானவையும் வாரா வினையே தொடர்ந்து வரும் என்பது கருத்து).
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாலடியார் - 12.மெய்ம்மை , யார், உள்ள, இலக்கியங்கள், யாஅர், மெய்ம்மை, வரும், என்றும், செய்ந்நன்றி, நாலடியார், அவர், அறம், பொருள், யார்க்கும், உடம்பும், சொற்கள், இன்பம், அதுபோல, வருந்துவான், என்பது, வாழ்ந்தவர், உயிருக்குத், துணையாக, வராது, ஆராய்ந்து, றுருவின, காரணமும், எய்தும், கருத்து, தம்மை, மேலே, பொருளை, தருகிறேன், தக்காரும், குற்றம், பொய்த்தல், பதினெண், கீழ்க்கணக்கு, சங்க, தின்னினும், தேவரே, செல்வம், காலத்தில், உறவினர், பலராவர், தங்கள், எப்போதும், இருப்பர், தின்றாலும், நடுவணது