நாலடியார் - 10.ஈகை
இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு. |
91 |
பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. |
92 |
எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகியிருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்; கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால். |
93 |
பிறருக்குக் கொடுத்துத் தானும் அனுபவித்தாலும் பொருள் சேரும் காலத்தில் சேரும். (நம்மிடத்தில் பொருளைச் சேர்த்த) நல்வினை தொலைந்தபோது, அப் பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கிவிடும். (இந்த உண்மையை அறியாதவர்) வறுமையால் வாடி வருந்தித் தம் உதவி நாடி வந்தவா¢ன் துயரைப் போக்க மாட்டார்கள் (அறிந்தவர்கள் பிறர் துன்பம் களைவர் என்பது கருத்து).
இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து அடாஅ அடுப்பி னவர். |
94 |
ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால் ஈதல் இசையா தெனினும் இரவாமை ஈதல் இரட்டி யுறும். |
95 |
மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறா¢டம் சென்று பிச்சை எடுக்காமல் இருத்தல், கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது. (வறுமையால் பிறருக்கு ஒன்றும் தர முடியாவிட்டாலும் பிறா¢டம் பிச்சை கேட்காமல் இருத்தல் மிக நன்று).
நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. |
96 |
பலரும் தம்மை விரும்புமாறு வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், ஊர் நடுவிலே மேடையால் சூழப்பட்ட பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர், தன் குடும்பம் வளமுடையதாயிருக்கும் போதும் பிறர்க்குக் கொடுத்துத் தான் உண்ணாத மாக்கள் சுடு காட்டில் உள்ள ஆண் பனை மரமே ஆவர். (ஊர் நடுவில் பழம் தரும் பெண் பனையும் இருந்து, அதைச் சுற்றிலும் திண்ணையும் இருந்தால், பலரும் வந்து பழத்தைப் பறித்துத் திண்ணையில் அமர்ந்து உண்பர். அதுபோலச் செல்வர் தம்மை அடைந்தவர்க்கு உண்ண உணவும், இருக்க இடமும் தருவர். செல்வம் பெருகியிருந்தும் யாருக்கும் கொடாதவர் அனைவராலும் வெறுக்கத்தக்க சுடுகாட்டில் உள்ள ஆண் பனை போல்வர்).
பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யு மாறு. |
97 |
கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை மலர்கள் போக்கும் அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய அரசனே! பருவ மழை தவறியபோதும், உலகில் உள்ள உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைப் பிறருக்குச் செய்யாவிட்டால் உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?
ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார் ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல் பொலிகடன் என்னும் பெயர்த்து. |
98 |
வளம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரையையுடைய வேந்தே! ஏந்திய கையை மறுக்காது,எதையாவது, இன்னார் இன்னார் என ஒரு வரையறை செய்யாது, திருப்பித்தர முடியாத வறியருக்கு ஒன்று ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். மீண்டும் திருப்பிக் கொடுப்பவர்க்கு ஒன்றை ஈதல் யாவரும் அறிந்த 'கடன்' என்னும் பெயருடையது.
இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். |
99 |
நாம் தருவது மிகவும் சிறியது என்று கருதாது, இல்லை என்று சொல்லாது, எப்போதும், பயனுடைய அறத்தை அனைவா¢டத்தும் செய்க! அது, வாயில் தோறும் பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பாத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல, மெல்ல மெல்லப் புண்ணியப் பயனைப் பூரணமாக்கும்
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல். |
100 |
குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர். (இதனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் உணர்த்தப்பட்டது
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாலடியார் - 10.ஈகை , உள்ள, கேட்பர், பொருள், இலக்கியங்கள், வறுமையால், என்னும், அளவு, ஈதல், நாலடியார், தம்மை, பிச்சை, பெண், பலரும், மாக்கள், இருத்தல், புன்னை, இன்னார், தூரம், வரையில், இருப்போர், மட்டுமே, கொடுத்தார், பாத்திரம், கடற்கரையையுடைய, பிறா¢டம், செய்க, தண்சேர்ப்ப, சான்றோர், வெறுக்கத்தக்க, காலத்தில், பொருளை, எப்போதும், இயன்ற, பதினெண், கீழ்க்கணக்கு, சங்க, உண்ணுங்கள், துன்பம், பிறருக்கு, ஒன்றும், நோக்கி, சேரும், கொடுத்துத், நில்லாது, செல்வம், பிறருக்குக், முடியாவிட்டாலும்