களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,- காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள், மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய், ஆ உதை காளாம்பி போன்ற, - புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. |
36 |
சோழன் போரிட்ட போர்க்களமானது ஒப்பிட முடியாத காட்சி உடையதாக இருந்தது. சோழன் பகைவரை வீழ்த்திய போரில் குதிரைப் படையால் உதைக்கப்பட்டமையால் வெண்கொற்றக் குடைகள் தரைமேல் கிடக்கின்றன. அக்காட்சி பசுக்களின் கால்களால் இடறப்பட்ட காளான்கள் கீழ் மேலாகச் சிதறிக் கிடப்பது போல் உள்ளது.
அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும் பெளவம் புணர் அம்பி போன்ற - புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து. |
37 |
சோழன் பகைவரை அழித்த போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட அரசர்களின் பிணங்கள் வடித்த இரத்தமானது முரசுகளையும் முத்துகளைக் கொண்ட தந்தங்களை உடைய யானைகளையும் இழுத்துச் செல்கிறது. அது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பெறும் சிறியதும், பெரிதுமான தோணிகளைப் போல இருந்தது.
பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின், பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன் துன்னாரை அட்ட களத்து. |
38 |
பொன்னால் ஆகிய மாலையினையும், கழலினையும் அணிந்து பகைவர்களை வென்ற போர்க்களத்தில் புண்பட்ட பருத்த உடலையும் கழுத்தையும் உடைய யானைகள் வலி தாங்க முடியாமல் தவிக்கும். இடியின் ஒலியைக் கேட்டுப் பாம்புகள் உருள்வன போல இருபக்கங்களிலும் புரண்டு துடிக்கும்.
மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள், புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை பஞ்சி பெய் தாலமே போன்ற - புனல் நாடன் வஞ்சிக்கோ அட்ட களத்து. |
39 |
சோழ மன்னன் வெற்றி பெற்ற போர்க்களத்தில், எதிரி வீரர்கள் கைதிகளாக விலங்கிட்டு அடங்க வைத்த போரில், காம்புகள் முறிபட்ட வெண்கொற்றக் குடைகள், இரத்தம் கசியும் தசைகள் நிறைந்து காட்சியளித்தன. அக்காட்சி செம்பஞ்சுக் குழம்பு நிறைந்துள்ள அகன்ற பெரிய தொட்டிகள் போல இருந்தது.
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல், எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த - பல் வேல், பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால் கணை மாரி பெய்த களத்து. |
40 |
சிவந்த கண்களை உடைய பாண்டியன் மழை போல் அம்புகள் பெய்த போர்க்களத்தில், காயம்பட்ட யானைகள் தந்தங்களோடு கூடிய முகங்களைத் தரைமேல் சாய்த்துக் கிடந்தன. அக்காட்சி உழவர்கள், வெள்ளியால் செய்யப் பெற்ற வெண்மைநிறக் கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுவது போல் தோன்றியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, களத்து, நாடன், அட்ட, போல், இலக்கியங்கள், போர்க்களத்தில், அக்காட்சி, சோழன், களவழி, உடைய, கால், புனல், பதினெண், நாற்பது, கீழ்க்கணக்கு, இழுத்துச், பெற்ற, பெய்த, யானைகள், பகைவரை, கொண்ட, சங்க, கீழ், போரில், குடைகள், வெண்கொற்றக், தரைமேல்