களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும்.களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.
நூல்
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து, முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல் துப்புத் துகளின் கெழூஉம் - புனல் நாடன் தப்பியார் அட்ட களத்து. |
1 |
சோழன் குற்றங்கள் செய்த பகைவரை வீழ்த்திய போர்க்களத்தில் சூரியன் தோன்றிய இளங்காலையில் பகைவர் மீது வாள் ஆழமாகப் பதிந்தது. அதனால் வழிந்த இரத்தத்தைப் போர்க்கள யானைகளின் கால்கள் கலக்கின. முற்பகலில் குழம்பைப் போன்ற சேறாக மாறியது. பிற்பகலில் வெயில் காய்ந்து யானைகளால் தூளாகிப் பிறகு பவளப் புழுதி போல் எங்கும் பறந்தும், பரவியும் இருக்கும்.
ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப் போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி, கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ் நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற - புனல் நாடன் ஆர்த்து அமர் அட்ட களத்து. |
2 |
சோழன் ஆராவாரித்துப் போரிட்ட போர்க்களத்தில் தரை மீது கிடந்த யானையின் கீழே, மூடுதுணியும் இல்லாத போர்முரசு சிக்கிக் கொண்டது. அந்த முரசின் உள்ளே புகுந்த யானையின் இரத்தம் வெளியே வருகிறது. அவை மழைநீர் நிரம்பிய நீர்க்குளத்தின் கரையின் கீழே உள்ள மதகுகள் சிறிது சிறிதாகத் தண்ணீரை உமிழ்ந்து வெளிப்படுத்துவன போல் இருந்தது.
ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார், இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்- மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன் பிழைத்தாரை அட்ட களத்து. |
3 |
இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.
உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப் பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில் செல் சுடர் சேர்ந்த மலை போன்ற - செங் கண் மால் புல்லாரை அட்ட களத்து. |
4 |
திருமால் போன்று சிவந்த கண்களை உடைய சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில் தேரின் சக்கரத்தைத் துதிக்கையில் தூக்கி நிற்கிறது யானை. அது, விரிந்த வானத்தில் செல்லும் சூரியன் மாலையில் ஒரு மலையைச் சேர்ந்தது போல் இருந்தது.
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து, குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால் தப்பியார் அட்ட களத்து. |
5 |
சிறந்த அம்புகளாலும், பிற கருவிகளாலும் புண்ணாக்கப்பெற்ற உடலிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடித்த கரிய காகங்கள் நிறம் மாறின. செம்போத்துப் பறவைகள் போல் உடல் மாறின. மீன்கொத்திப் பறவையின் சிவந்த அலகைப் போல் மூக்குகளையும் பெற்றவைகளாயின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, போல், அட்ட, களவழி, நாற்பது, களத்து, போர்க்களத்தில், குருதி, இலக்கியங்கள், யானையின், செங், முரசின், சோழன், பதினெண், கீழ்க்கணக்கு, நாடன், கீழே, யானை, மால், மாறின, சிவந்த, கிடந்த, நீர், சூரியன், எல்லாம், மீது, வாள், தப்பியார், சங்க, புனல்