இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா; பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா; மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா, ஒத்து இலாப் பார்ப்பான் உரை. |
21 |
கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல் துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில் நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல் இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.
யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா; ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா; தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா, கான் யாறு இடையிட்ட ஊர். |
22 |
யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம். அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.
சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா; துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா; அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா, நிறை இலான் கொண்ட தவம். |
23 |
மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றோரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா; தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா; காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா, யாம் என்பவரோடு நட்பு. |
24 |
காவலற்ற ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும். அவ்வாறே, நான், எனது என்பாரோடு தங்கியிருத்தல் துன்பமாம்.
நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா; ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா; கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா நட்ட கவற்றினால் சூது. |
25 |
நட்புக் கொண்டவர்களுடைய துன்பங்களைப் பார்ப்பது துன்பமாம். பகைவரது பெருமிதத்தைப் பார்ப்பது மிகவும் துன்பமாகும். உறவினர் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் துன்பமாகும். அவ்வாறே சூதாடுவது துன்பமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாம், துன்பமாகும், மிகவும், ஆங்கு, அவ்வாறே, இலக்கியங்கள், காண்டல், நாற்பது, இல்லாத, இருத்தல், பதினெண், கீழ்க்கணக்கு, சென்று, ஊரில், வாழ்தல், பார்ப்பது, மூதூர், சொல், உண்ணுதல், உணல், சங்க, கழுவுதல், தவம்