ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு

மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த் தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி புத்ரன் அபவித்தனொடு, பொய் இல் உருகிருதன், இத் திறத்த, - எஞ்சினார் பேர். |
31 |
களிப்பு மிக்க மயிலையொத்த சாயலையுடையவளே! கூறாது மீந்தவர்களுடைய பெயர்களும் தத்தன், சகோடன், கிருத்திரமன், தௌத்திரன், அபவித்தன்,உபகிருதன் என்னும் இவ்வகையே யுள்ளனவாம்.
கருத்து: மக்கள் தத்தன் முதலாகப் பின்னும் பலவகைப் படுவர்.
உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரை உரையான்; பொருளொடு, வாழ்வு, ஆயு, உரையானாய், - பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்! - ஈத்து உண்பான் தேவாதி தேவனாத் தேறு! |
32 |
மலர் முதலியவற்றை வண்டுகள் மொய்த்துண்கின்ற கூந்தலையுடையாளே! தன் குலத்தினுயர்வையும் குடிப்பிறப்பி னுயர்வையும் சொல்லாமல், அவ்விரண்டு மில்லாத மற்றவர்மேல் குற்றங் கூறாமல் தனது பொருளினளவோடு அனுபவிக்குஞ் செல்வத்தையும் ஆயுளையும் வெளிப்படுத்தானாகி, இரப்பவர்க்குக் கொடுத்துத் தானும் அனுபவிப்பவனைத் தேவர் களிற் சிறந்த தேவனாகத் தெளிவாய்.
கருத்து: தன்னுயர்வு கருதிப் பிறரை இழித்துரையாமலும் உடைமை விளம்பாமலும் ஒழுகி, வறியார்க்கு இட்டுண்பவன், தேவர் தலைவனாவான்.
பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும், மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான், - கூந்தல் மயில் அன்னாய்! - குழீஇய வான் விண்ணோர்க்கு வேந்தனாம் இவ் உலகம் விட்டு. |
33 |
விரி தோகையன்ன கூந்தலையுடையாளே! பிறர் தீங்கு கருதி யுண்மையும் பேசானாகியும் இகழானாகியும் தனக்குத் தீமை செய்தாரையும் புறத்தில் அவமதித்துப் பேசானாகியும், ஒருவருக்கு நேர்ந்த இடுக்கண்களை யொழிக்கும் பொருட்டு நடந்த உண்மையைச் சொல்லானாகியும், தன்னிடத்திலுள்ள பொருள்களை வாய் விட்டுச் சொல்லானாகியும், நண்பனிடத்தும் தன் வறுமைத் துன்பத்தைச் சொல்லானாகியும் உள்ள ஒருவன் இந்த உலகத்தைவிட்டு வானுலகிற் கூடியுள்ள தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரனாவான்.
கருத்து: பொய்யாமை முதலியன உடையான் இந்திர வாழ்வில் வைகுவான்.
சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான், இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக் கூடுவது ஈவானை, - கொவ்வைபோல் செவ் வாயாய்! - நாடுவர், விண்ணோர், நயந்து. |
34 |
கோவம்பழம் போன்ற சிவந்த வாயினையுடையாய்! கீழ்மையான சொற்களைப் பேசாமலும், சினமூட்டுஞ் சொற்களைக் கூறாமலும், சீறுதலில்லாமலும், தன்னாலியலக்கூடிய மேம்பாட்டை எடுத்துப் பாராட்டாமலும், பிறர் குற்றங்களைச் சொல்லாமலும், தன்னிடத்து வந்து ஏற்றோர்க்கு இல்லையென்னாது இசைந்தமட்டு முதவுவோனைத் தேவர்கள் தங்களுடனிருந்து மகிழ விரும்புவர்.
கருத்து: கீழ்மைபேசாமை முதலியன உடையானைத் தேவரும் விரும்புவார்.
துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும், - பண் ஆளும் சொல்லாய்! - பழி இல் ஊண் பாற்படுத்தான், மண் ஆளும், மன்னாய் மற்று. |
35 |
பண்ணின் இனிமையை வென்ற சொல்லையுடையவளே! துறந்தவர்க்கும், துறவாதவராகிய பிரம்மச்சாரி வானப்பிரத்த னிவர்க்கும், வறியார்க்கும், தென்புலத்தார்க்கும், பலமற்றவர்க்கும், இவர்போல்வராகிய மற்றுஞ் சிறந்த தக்கார்க்கும் நல்வழியிலீட்டிய உணவை யளித் தன்பு செய்தவன் மறு பிறப்பில் பூமண்டலத்தையாளு மன்னனாவான்.
கருத்து: துறந்தார் முதலானவர்கட்கு ஊண் கொடுப்பவன் மறுமையில் அரசனாவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, உரையான், கருத்து, இலக்கியங்கள், பதினெண், சொல்லானாகியும், தத்தன், ஏலாதி, கீழ்க்கணக்கு, பேசானாகியும், விட்டு, பிறர், முதலியன, ஆளும், துறந்தார், சிறந்த, தேவர், பொய், கிருத்திரமன், மயில், சங்க, கூந்தலையுடையாளே, பிறரை, சகோடன்