சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

வருவாய்க்குத் தக்க, வழக்கு, அறிந்து, சுற்றம் வெருவாமை, வீழ் விருந்து ஓம்பி, திரு ஆக்கும் தெய்வத்தை எஞ் ஞான்றும் தெற்ற வழிபாடு செய்வதே-பெண்டிர் சிறப்பு. |
41 |
தமக்குள்ள பகுதியினளவறிந்து அதற்குத்தக்கபோக்கறிந்து, சுற்றத்தை வெருவாமைத் தழுவி, விருந்து புரந்து, திருவினையாக்குந் தெய்வத்தை வழிபாடு செய்க. இவ்வைந்து தொழிலும் பெண்டிர்க்குச் சிறப்பாவன.
கருத்துரை: இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவினளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும் சுற்றந்தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பனவாம்.
நாள் கூட்டம், மூழ்த்தம், இவற்றொடு நன்று ஆய கோள் கூட்டம், யோகம், குணன், உணர்ந்து, - தோள் கூட்டல் உற்றானும் அல்லானும், - ஐந்தும் உணர்வான் நாள் பெற்றானேல், கொள்க, பெரிது! |
42 |
நாள் பொருந்துதலும், மூர்த்தமும், நன்றாய்க் கோள் கூடுதலும், அமிர்தயோக முதலாயின யோகமும், இவற்றினான் வருநன்மையு மாராய்ந்துணர்வானாட் பெற்றாலந்நாளை நன்றென்று கொள்க; ஒருவனோடொருத்தியைக் கூட்டலுற்றவனு மற்றுஞ் சில நன்மைக் காரியஞ் செய்யலுற்றவனும்.
கருத்துரை: திருமணம் முதலிய நற்செயல்களுக் கெல்லாம் நாட்பொருத்தம் நாழிகைப் பொருத்தம் முதலியன பார்த்து நல்ல நாள் கொள்ள வேண்டும்.
பேண், அடக்கம், பேணாப் பெருந் தகைமை, பீடு உடைமை, நாண் ஒடுக்கம், என்று ஐந்தும் நண்ணின்றா, பூண் ஒடுக்கும் பொன் வரைக் கோங்கு ஏர் முலைப் பூந் திருவே ஆயினும், தன் வரைத் தாழ்த்தல் அரிது. |
43 |
சுற்றத்தாரைப் பேணலும், அடக்கமுடைமையும், பிறனொருவனைப் பேணாத பெருந்தகைமையும், ஒப்புரவு முதலாயுள்ள பீடுடைமையும் நாணால்வரும் ஒடுக்கமென்று சொல்லப்பட்ட ஐந்தனையும் பொருந்தாது தன் கொழுநனைத் தன்வரைத் தாழ்த்தலரிது, பொன்வரைக் கோங்கேர்முலைப் பூந்திருவேயாயினும்.
கருத்துரை: திருமகளைப் போன்ற செல்வியே யெனினும் ஒரு பெண் சுற்றந்தழுவுதல் அடக்கம் முதலியன உடையளாய்க் கணவன் அளவில் அடங்கியிருத்தலே நன்றாம்.
வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர, வைகலும் நீர் சான்று உயரவே, நெல் உயரும்; சீர் சான்ற தாவாக் குடி உயர, தாங்கு அருஞ் சீர்க் கோ உயர்தல் ஓவாது உரைக்கும் உலகு. |
44 |
(ப.பொ-ரை.) வார்சான்ற கூந்தலையுடையாய்! வயலினது வரம்புயரவே, வைகலு நீருயர்ந்து, நாடோறு நெல்லுயரும், சீரமைந்த கெடாத குடியுயரவே, பகைவராற்றாங்குதற்கரிய சீர்மையையுடைய மன்னுயரு மென்றொழியாதே சொல்லாநிற்கு மிவ்வுலகம்.
கருத்துரை: வரம்புயர நீருயரும், நீருயர நெல்உயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான் என்பதாம்.
அழியாமை எத் தவமும், சார்ந்தாரை ஆக்கல், பழியாமைப் பாத்தல் யார் மாட்டும் ஒழியாமை, கன்று சாவப் பால் கறவாமை, செய்யாமை மன்று சார்வு ஆக மனை. |
45 |
யாதானு மொருதவத்தை யழியாமையும், தம்மையடைந்தாரை யாக்குதலும், பிறர்தம்மைப் பழியாமை, யார்மாட்டு மொளியாமைப் பகுத்துண்டலும், கன்று சாவ பால்கறவாமையும் மன்றருகு மனையெடாமையுஞ் சேரும்.
கருத்துரை: தவத்தை யழிக்காமையும் அடைந்தாரை யாக்குதலும், பிறர் தவத்தைப் பழியாமையும் கன்றறிந்த பசுவைப் பால் கறவாமையும் வேறு சார்வாக மனை யெடாமையும் நற்செயல்களாமென்பதாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, இலக்கியங்கள், நாள், சிறுபஞ்சமூலம், பதினெண், தெய்வத்தை, கீழ்க்கணக்கு, அடக்கம், சான்ற, கன்று, பால், யாக்குதலும், முதலியன, கோள், வழிபாடு, விருந்து, கூட்டம், சங்க, ஐந்தும், கொள்க