நற்றிணை - 99. முல்லை

'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் தாம் வரத் தௌத்த பருவம் காண்வர இதுவோ?' என்றிசின்- மடந்தை!- மதி இன்று, |
5 |
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- பிடவமும், கொன்றையும் கோடலும்- மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. |
10 |
மடந்தாய்! தண்ணிதாகிய நீர்மை முற்றும் இல்லாத சென்று கடக்க முடியாத நீண்ட நெறியில்; வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் வீசுகின்ற வெப்பத்தாலே நோக்குவார் அஞ்சும்படியாக நடுக்கத்தைச் செய்யும் கொடிய காட்டின்கண்ணே சென்ற காதலர்; தாம் வருவேமென்று அழகு பொருந்தத் தௌ¤யக் கூறிய பருவம் இதுதானோ ? என்று வினவாநின்றனை, இஃதன்று; அறிவில்லாது பருவகாலத்தை மறந்து கடனீரையுண்டதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை நோக்கி இது கார்காலமென மறதியுற்றவுள்ளத்துடனே; அறியா தனவாய்ப் பிடவுங் கொன்றையுங் காந்தளும் இன்னும் பலவும்; அஃறிணையாகிய அறிவில்லாப் பொருள்களாதலின் மிக மலர்ந்துவிட்டன; அவற்றைக் கண்டு நீ கார்காலமென மயங்காதேகொள் !;
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது. - இளந்திரையனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 99. முல்லை, இலக்கியங்கள், பருவம், நற்றிணை, முல்லை, மறந்து, கார்காலமென, கண்டு, வெயில், எட்டுத்தொகை, சங்க, தாம்