நற்றிணை - 72. நெய்தல்

'பேணுப பேணார் பெரியோர்' என்பது நாணு தக்கன்று அது காணுங்காலை; உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது அழிதக்கன்றால் தானே; கொண்கன், |
5 |
'யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான் எற் பிரிதல் சூழான்மன்னே; இனியே கானல் ஆயம் அறியினும், 'ஆனாது, அலர் வந்தன்றுகொல்?' என்னும்; அதனால், 'புலர்வதுகொல், அவன் நட்பு!' எனா |
10 |
அஞ்சுவல்- தோழி!- என் நெஞ்சத்தானே! |
தோழீ பெரியோர்தாம் விரும்பி ஒழுகவேண்டுவனவற்றில் அங்ஙனம் விரும்பி யொழுகாரென்று கூறுவதுதான், அதனை ஆராய்ந்து நோக்குமிடத்து எனக்கே வெட்கம் உடைத்தாயிராநின்றது; உயிர் ஒன்றாயிருந்தாலொத்த குற்றமற்ற நட்பினையுடைய நினக்கு யான் மறைப்பதானது எவ்வளவு பெரிய மானக் கேடாயிராநின்றது; முன்பு, "யான் அன்னைக்கு அஞ்சுவேனாகலின் நீ அகன்று போவாய்" என்றாலும் அக்காலத்து நம் கொண்கன் நம்மைவிட்டுப் பிரியக் கருதுபவனல்லன், அது கழிந்தது; இப்பொழுதோ எனின் இக்களவொழுக்கம் கானலின்கண் விளையாட்டயர்கின்ற தோழியர் கூட்டம் அறிவதாயினும் அடங்காமல் எங்கே வெளிப்படுமோ? என்று அஞ்சிக் கூறாநிற்பன்; ஆதலின் அவனது நட்பு இல்லையாய் விடுமோவென்று என்னெஞ்சத்தில் அஞ்சாநிற்பேன்;
தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - இளம்போதியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 72. நெய்தல், இலக்கியங்கள், யான், நற்றிணை, நெய்தல், நட்பு, தோழி, விரும்பி, அஞ்சுவல், நினக்கு, எட்டுத்தொகை, சங்க, உயிர், கொண்கன்