நற்றிணை - 60. மருதம்

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ! கண்படை பெறாஅது, தண் புலர் விடியல், கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு |
5 |
கவர் படு கையை கழும மாந்தி, நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின் நடுநரொடு சேறிஆயின், அவண் சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் மா இருங் கூந்தல் மடந்தை |
10 |
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே. |
மலையைச் செய்து வைத்தாற் போன்ற நிலை பொருந்திய உயர்ச்சியையுடைய மிக்க நெற்களையுடைய பல பெரிய சேர்களைக் கட்டி வைத்திருக்கின்ற எருமையைப் பூட்டி உழுகின்ற உழவனே !; நீ இரவிலே தூங்காது குளிர்ச்சியையுடைய இருள் நீங்கும் வைகறைப் பொழுதிலே கரிய கண்களையுடைய வரால் மீனைப் பெரியனவாகத் தடிந்த தசையாகிய ஆணத்திலே பிறழவிட்ட மிளிர்வையுடனே உணவுக்குரிய அரிசியாலாக்கிய மிக்க சோற்றுத்திரளையை; விருப்பமிக்க கையையுடையையாய் நிறைய மயக்கமேறவுண்டு நீர்மிக்க சேற்றிலே நாற்றுமுடிகளை நடுதற்கு நின் உழத்தியரோடு உடன் செல்லுவையாயின்; நீ உழுகின்ற வயலிலுள்ள வளமிக்க கோரைகளையும் நெய்தல்களையும் களையெனக் களையாது பாதுகாப்பாய்; அங்ஙனம் பாதுகாத்து வைப்பது தான் எற்றிற்கோ எனக் கேட்டியாயின், எங்களுடைய மிக்க கரிய கூந்தலையுடைய தலைவி இப்பொழுது இற்செறிக்கப்பட்டாள், மற்றொரு பொழுது காப்புச்சிறை நீக்கப் பெறுவளேல் அவள் அவற்றுள் அழகிய கோரையை வளையமாகப் பூண்டுகொள்ளுவாள், நெய்தலந்தழையை உடையாக அணிந்து கொள்ளுவள் காண்;
சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - தூங்கலோரியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 60. மருதம், இலக்கியங்கள், மிக்க, நற்றிணை, மருதம், உழுகின்ற, கரிய, நிலை, எட்டுத்தொகை, சங்க, நின்