நற்றிணை - 44. குறிஞ்சி

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி, நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் குறியா நோக்கமொடு முறுவல் நல்கி, மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய நினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்த |
5 |
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல, பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில், குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, |
10 |
செல் மழை இயக்கம் காணும் நல் மலை நாடன் காதல் மகளே? |
நெஞ்சே ! கொல்லையிலுள்ள நீண்ட இலையையுடைய முற்றிய கதிரைத் தாங்கமாட்டாமே சாய்ந்த தினையின் வளைந்த தாள் நிமிர்ந்துநிற்குமாறு அவற்றின் கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போதலைக் கருதி; செழுவிய மிக்க பல கூட்டமுடைய குறவர்கள் சிறார் கூடித் தங்கி விளையாட்டு அயர்கின்ற முன்றிலின்கண் இருந்து; குடம் போன்ற காயையுடைய ஆசினிப் பலாவையுடைய தோட்டத்தில் நீண்ட பலவாய மரங்களினுயர்ந்த கிளைகளிலுள்ள மின்மினியை விளக்கமாகக் கொண்டு விசும்பு செல்லுகின்ற மழை முகிலினியக்கத்தை அறியாநிற்கும்; நல்ல மலைநாடன் அன்புள்ள புதல்வி, ஒப்பில்லாத தோழியர் கூட்டத்துடன் அருவியினீராடி; அங்கு நீரான் அலைக்கப்படுதலாலே சிவந்த பெரிய அமர்த்த குளிர்ச்சி¢யையுடைய கண்களின் குறிக்கப்படாத பார்வையையும், புன்னகையையும் நமக்குத் தந்து; தனது மனையிடத்துச் சென்றுவிட்ட பிற்பாடு; கருதிவந்த நின்னாலோ அவள் அறியத் தக்காள் ! முன்னரேயன்றோ கைப்பற்றிக் கொண்டிருக்க வேண்டும் !
இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது. - பெருங்கௌசிகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 44. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, ஆசினிப், நீண்ட, நெஞ்சே, சிவந்த, எட்டுத்தொகை, சங்க