நற்றிணை - 397. பாலை

தோளும் அழியும், நாளும் சென்றென; நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே; நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; |
5 |
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின் பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின், மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே. |
காதலன் வருவதாகக் கூறிய பருவஞ் சென்றொழிந்ததனால்; என் தோளும் வாட்டமடையும்; நீண்ட நெறியையுடைய சுரத்துவழியை நோக்கி நோக்கி ஒளியற்று என் கண்களும் காணுதற்குரிய பொலிவழிந்தன; எனது அறிவும் என்னைக் கையிகந்து மயக்க மடைந்து வேறாகாநின்றது; நோயை வைத்து உயிர் நீங்காதாகலின் அந் நோயுங் காடேறிச் சென்றொழியாநின்றது; உயிரைப் பெயர்த்தற்குரிய மாலைப் பொழுதும் வந்து இறுத்து விட்டது; இனி யான் எவ்வண்ணமாவேனோ? அறிந்திலேன்; இவ்வுலகத்தில் பிறந்தோர் இறப்பரென்பது உண்மையானே அந்த இறப்பு வந்ததேயென்று யான் அஞ்சுகிற்பேனல்லேன்; அவ்வாறு இறந்துழி; எனது இனி வரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்பொழுது மறப்பேனோ வென்று அவ்வொன்றனுக்கே யான் அஞ்சாநிற்பேன்;
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - அம்மூவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 397. பாலை, இலக்கியங்கள், பாலை, யான், நற்றிணை, நோக்கி, காதலன், எனது, பிறிது, தோளும், எட்டுத்தொகை, சங்க, அறிவும்