நற்றிணை - 372. நெய்தல்

அழிதக்கன்றே- தோழி!- கழி சேர்பு கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம், வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு |
5 |
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி, அன்னை தந்த அலங்கல் வான் கோடு உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு இனையல் என்னும்' என்ப- மனை இருந்து, |
10 |
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் திண் திமில் விளக்கம் எண்ணும் கண்டல் வேலிக் கழி நல் ஊரே. |
தோழீ! கடற்கரைச் சோலையிலுள்ள பனையின் தேனையுடைய அழிந்த பழம்; மூக்கு இற்றுக் கழியை அடைந்து பெரிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு அள்ளுதலமைந்த கரிய சேற்றிலே புதையும்படி விழுந்ததனால்; அவ்வோசைக்கு அஞ்சி¢ச் சுற்றத்தையுடைய நாரைகள் இனத்தோடு இரிந்தோடாநிற்கும் நீர்த்துறையையுடைய நின் காதலன்; வளையாகிய சங்கு போன்ற வெளிய மணலையுடையதாகிய இடத்தில்; முயங்க விரும்பிய நினது பெருந்தகை கொண்ட உள்ளத்தொடு பொருந்துமாறு; மகளிர் இல்லின்கண் இருந்து வருவிருந்தோம்பும் இயற்கையாலே; கரிய கழியிடத்து மீனைத் தேடுகின்ற குளிரால் நடுங்கும் பரதவருடைய; திண்ணிய மீன் படகிலிருக்கும் விளக்குகளை எண்ணுகின்ற; கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழி சூழ்ந்த நம்முடைய நல்ல ஊரானது; இனிதாக நோக்கி அன்னை நினக்குக் கொடுத்த அசைகின்ற குழையுடைய பெரிய கோடு குலைதலாலே நீ வருந்துவது போலக் கருதி அஞ்சி 'நிகழ்ந்ததற்கு நீ வருந்தாதே கொள்' என்று கூறாநிற்கும்; இங்ஙனம் கூறுவதனால் இல்வயிற் செறியார்; ஆதலின் நீ மனம் அழிவது தகுதியுடையதன்று காண்!
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது. - உலோச்சனார் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 372. நெய்தல், நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, கண்டல், இருந்து, பெரிய, கரிய, செறியார், அஞ்சி, மேல், அன்னை, சங்க, எட்டுத்தொகை, பழம், மூக்கு, நோக்கி, கோடு