நற்றிணை - 297. குறிஞ்சி

பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப, நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்; பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ, மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை; 'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை; |
5 |
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே; சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை மையல் உறுகுவள், அன்னை; |
10 |
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே. |
தோழீ! பொன்னாற் செய்த கிண்ணத்துள் வைத்த பால் நின்னால் உண்ணப்படாமல் கீழே வைத்திருக்கின்றமை காணாய; நின் மேனியின் ஒளிமிக்கு வேறு வண்ணமாகத் தோன்றுவ; அன்றி மெல்ல நின் சிவந்த அடிகளால் நடந்து இயங்கினாயுமல்லை; பல மாட்சிமைப்பட்ட படுக்கையைப் பகையாகக் கருதிக்கொண்டு; மகிழா நோக்கம் கட்குடியான் மயங்கினாற்போல் ஆயினை; நாம் இப்படியிருப்பது என்ன காரணம் என்று நினைக்கலுஞ் செய்திலை; ஆகலின் நின்னுள்ளே தோன்றும் குறிப்பானது மிகப் பெரிதாயிராநின்றது; வண்டுகள் மொய்க்கின்ற மலரும் பருவத்தினையுடைய பூவினை வெறுத்த மெல்லிய காலையுடைய கோழி; முதிர்ந்த மிளகுக்கொடி ஒன்றோடொன்று பின்னியிருப்பதன்கண்ணே துயிலாநிற்கும் மலை நாடன்; மெல்ல வந்து நின்மார்பினை அடையப்பெற்றதனால் ஆகிய சில குறிகளை நோக்கிய; அன்னை இவளுக்கு இக் குறிப்புகள் உண்டாயதன் காரணம் யாதென்று மயக்கமுறாநிற்கும் உவ்விடத்தே கேளாய்; ஐயப்பாடின்றி அவ்வன்னை கடுமையான குரலையெடுத்து நின்னைக் கூவுகின்றனள் காண்;
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம். - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 297. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, நின், குறிஞ்சி, மெல்ல, வந்து, அன்னை, தோழி, காரணம், நாடன், நோக்கம், சங்க, எட்டுத்தொகை, பால், மகிழா, தோன்றும், சிதர்