நற்றிணை - 280. மருதம்

'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும் தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை புலவாய்' என்றி- தோழி!- புலவேன்- |
5 |
பழன யாமைப் பாசடைப் புறத்து, கழனி காவலர் சுரி நந்து உடைக்கும், தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என் நல் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் எய்தாமாறே. |
10 |
தோழீ! கொக்கு வந்திருந்ததனால் கிளை அசைதலின் உதிர்ந்த இனிய மாங்கனியானது; கொக்கினது குவிந்திருந்த நிலைபோன்ற அரும்புகளையுடைய ஆம்பல் மிக்க நிறைந்த ஆழமுள்ள நீரிலே 'துடும்' என வீழாநிற்கும்; தண்ணிய துறைகளையுடைய ஊரனது; அமையாத அயலாந்தன்¢மை ஆகிய செய்கையைக் கண்டு வைத்தும் 'நீ புலவாதே கொள்!' என்று என்னை ஆற்றுகின்றனை; வயலிலுள்ள யாமையின் பசிய கற்போன்ற முதுகிலே அவ்வயலைக் காவல் செய்யும் மள்ளர் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்துத் தின்னாநின்ற; பழைமை முதிர்ந்த வேளிருடைய குன்றூர்போன்ற; எனது நல்ல மனையின் கண்ணே வருகின்ற மிக்க விருந்தினரை உபசரித்தலிற் கையொழியாமையால்; அவனை எதிர்ப் படப் பெற்றிலேன்; அதனாலே புலவாது வைகினேன்; அன்றேல் புலவி கூர்தலின் இங்கு வர ஒல்லேன் கண்டாய்!
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 280. மருதம், இலக்கியங்கள், நற்றிணை, மருதம், தோழிக்குத், தலைமகள், மிக்க, அன்ன, எட்டுத்தொகை, சங்க, ஆம்பல்