நற்றிணை - 242. முல்லை

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப, புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ, பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து |
5 |
செல்க- பாக!- நின் தேரே: உவக்காண்- கழிப் பெயர் களரில் போகிய மட மான் விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட, காமர் நெஞ்சமொடு அகலா, தேடூஉ நின்ற இரலை ஏறே. |
10 |
பாகனே! பழுத்து உதிர்தலானே இலைகளில்லாத பிடாவெல்லாம் மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு முகிழ்ப்ப; புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடி பூக்கள் மலராநிற்ப; கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய; நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கா நிற்ப; இன்று காலைப் பொழுதிலேயே மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்; கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்; அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தொடு சென்று தேடாநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்!; ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக!
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது. - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 242. முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, முல்லை, விரைந்து, கார், சங்க, எட்டுத்தொகை, மலர்