நற்றிணை - 234. குறிஞ்சி

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃது ஆன்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு |
5 |
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
நமரங்காள்!; நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே ஏற்றுக்கொண்டு; இவளை அந் நம்பிக்கே வழங்கின் பெரிதும், நன்று நன்றாகும்; அங்ஙனமின்றி; நம் மகளின் முலைக்கு விலையாக அவர் தரும் பொருளைச் சீர்தூக்குவீராயின்; கழுமலப்போரின்கண் மாற்றாரை அவர்தங் குடையோடே அகப்படுத்திய வெற்றியையுடைய நல்ல தேரினையுடைய சோழன் தலைநகராகிய; பங்குனித்திங்களிலே விழாவெடுக்கும் உறந்தையோடே கூடிய; உள்ளி விழா நிகழ்தற்கிடனான சேரன் தலைநகராகிய வஞ்சிதானும் ஈடில்லாச் சிறிதாய்விடுங் கண்டீர்: ஆதலால் இச் சான்றோர் தரும் பொருளை ஏற்று இவளை அந் நம்பிக்கே ஈதல் நன்று; என்பதாம்.
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 234. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, நம்பிக்கே, நன்று, இவளை, அறத்தொடு, தலைநகராகிய, தரும், உள்ளி, சங்க, எட்டுத்தொகை, சான்றோர், விழவின், முலைக்கு, விலையாக