நற்றிணை - 222. குறிஞ்சி

கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் கை புனை சிறு நெறி வாங்கி, பையென, விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
5 |
செலவுடன் விடுகோ- தோழி!- பலவுடன் வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, பெருங் களிறு பிளிறும் சோலை அவர் சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? |
10 |
தோழீ! பலவாகிய மலைவாழையும் உயர்ந்த சுரபுன்னைகளும் பொருந்திய மலையின்கண்ணே; துயிலுகின்ற பிடியானையின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் அப்பிடியைக் காணப்பெறாது பெரிய களிற்றுயானை பிளிறாநிற்கும்; சோலையையுடைய அவரது உயர்ந்த நெடிய மலையை நீ பார்த்தேனும் நினது கவலை தணியும்படியாக; கரிய அடியையுடைய வேங்கையின் சிவந்த மலர்களையுடைய வளைந்த கிளையிலே தழும்புபடக் கட்டிய; வளையவிட்ட கயிற்றினாலாகிய கைவன்மையாலே செய்த சிறிய முடக்கத்தையுடைய ஊசலை யிழுத்து; மெல்ல நின்னை யேற்றிவைத்து யான் அப்பொழுது நின்னுடைய அல்குலின் மேலே கிடந்த பசிய பொன்னாலாகிய வடத்தைப்பற்றி ஆகாயத்திலே பறக்கின்ற அழகிய மயிலே போல நின்னை ஆட்டி நீளச் சென்று மீளும்படி விடுவேனோ? ஒன்று கூறிக்காண்!
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 222. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, உயர்ந்த, நின்னை, தோழி, யான், எட்டுத்தொகை, சங்க