நற்றிணை - 153. பாலை

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர் செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும் தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, |
5 |
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து, உண்டல் அளித்து என் உடம்பே- விறல் போர் வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே. |
10 |
கீழ் கடலிலே சென்றிறங்கி நீரை முகந்தெழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு; அணுத்திணிந்த இவ்வுலகம் அவ் விருளினின்று புலப்படுமாறு; கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற்போல மின்னி; எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம்; அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி யொழிந்தாற்போல; என் நெஞ்சம் இங்கு வைகுவதொழிந்து அவரிடஞ் சென்று அங்கு வைகி அவ்வண்ணமே ஒழிந்து போனதனாலே; வலிய போர் செய்யவல்ல வெய்ய சினத்தையுடைய பகைவேந்தனது படை அலைத்தலாலே கலங்கி; ஊரில் வாழுங் குடிமக்கள் எல்லாம் குடியோடி அகன்றுவிட்ட பெரிய பாழ் நகரத்தை; காவல் செய்திருந்த ஒரு தனி மகனைப் போன்று உண்ணுதலாலே என்னுடம்பு இங்குக் காக்கப்படுந் தன்மையதாயிராநின்றது;
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது. - தனிமகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 153. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, போர், கலங்கி, பாழ், பெய்யுந், ஒழிந்து, தொழில், எட்டுத்தொகை, சங்க, மின்னி, சென்று, நெஞ்சம்