நற்றிணை - 150. மருதம்

நகை நன்கு உடையன்- பாண!- நும் பெருமகன்: 'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு மன் எயில் உடையோர் போல, அஃது யாம் |
5 |
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக் கலி மா கடைஇ வந்து, எம் சேரித் தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் |
10 |
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே. |
பாணனே ! நும் பெருமகனாவான் பலராலும் நகுதற்படுதலை நன்றாகவுடையனாயிராநின்றான; 'காவலரண் சிதையும்படி பலவாய யானைப் படைகளைப் பரக்கவிட்டுச் சென்று பலபல அரணங்களை வென்று கொண்ட வலிமைமிக்க சேனைகளையுடைய பாண்டியன் மாறன் வழுதி பன்னெடு நாள் வாழ்வானாக!' என்று வணங்கி; அடைகின்ற நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர்களைப்போல அதற்காக யாம் சிறிதேனும் வருந்துதலைச் செய்யோம் என்று கூறி; மென்மையான நடையையுடைய கனைக்கின்ற குதிரையைச் செலுத்தி எமது சேரியின்கண் வந்து; கொண்டை மாலையையும் அழகுக் கிடுங் கண்ணியையுங் காட்டி; ஒருமைப்பாட்டையுடைய எமது நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டமை இனி விடுவதமையுமோ? அமையாது காண்!; நீ அஞ்சுமாறு எம் அன்னை நெருங்கிய கணுக்களையுடைய சிறிய மூங்கிற்கோலைக் கையிலேந்தி வெகுளி பெரிதும் உடையளாயிராநின்றாள்; சிறிதும் வருந்துகிலள், அவளால் ஒறுக்கப்படுவதுண்டு போலும்; ஆதலின் நீ இங்கே வாராதே கொள்!;
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது. - கடுவன் இளமள்ளனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 150. மருதம், இலக்கியங்கள், நற்றிணை, மருதம், யாம், வந்து, காட்டி, எமது, எனத், கொள், எட்டுத்தொகை, சங்க, நும், வழுதி