நற்றிணை - 143. பாலை

ஐதே கம்ம யானே; ஒய்யென, தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் |
5 |
வழு இலள் அம்ம, தானே; குழீஇ, அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் இன்னா இன் உரை கேட்ட சில் நாள் அறியேன் போல உயிரேன்; 'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. |
10 |
உழையர் கொணர்ந்த மணல் பரப்பிய அழகிய மாளிகையின் முன்றிலின்கண்; ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும் ஆடிடமாகிய நொச்சி வேலியையும் காணுந்தோறும்; யான் விரைய நீர் வடிகின்ற கண்ணையுடையேனாகி அழுகின்ற என்னினுங்காட்டில்; அவள் வளர்த்த கிளியும் "அன்னாய்! துயிலுணர்தி" எனக் கூவா நிற்கும்; இவை நிற்ப என் இளம் புதல்விதானும் குற்றமே உடையள் அல்லள்; அவள் கொண்ட காமம் மிகவியப்புடையதாய் இராநின்றது; அம்பல் மிக்க இப் பழைய ஊரின்கணுள்ள அலர்தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் பலரும் ஒருசேரக்கூடிக் கூறுகின்ற கொடிய இனிய உரைகேட்ட சில நாளளவும்; யாதொன்றனையும் அறியாதேன் போல மூச்சுவிட்டேனுமில்லேன்; பின்னும் மிக அலர் எழுதலாலே ஒரோவொருகால் என்மகளை நோக்கி நின் கூந்தல் பண்டைமணமின்றி வேறு புதுமணம் கமழாநின்றதே அஃதென்ன காரணமென்று வினாவினேன்; தகுதியான விடை கூறினாளுமல்லள்; முன்னரே அவளது இயல்பை அறிந்து வைத்தும் பாதுகாவாமையின் யானே வழுவுடையேன் ஆயினேன்மன்;
மனை மருட்சி. - கண்ணகாரன் கொற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 143. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, அம்பல், அலர், நின், அவள், எனக், மணல், எட்டுத்தொகை, சங்க, யானே, நீர்