குறுந்தொகை - 82. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார் யாரா குவர்கொல் தோழி சாரற் பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற் கொழுங்கொடி அவரை பூக்கும் |
5 |
அரும்பனி அச்சிரம் வாரா தோரே. | |
- கடுவன் மள்ளனார். |
தோழி! மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது சிறிய தினையரிந்த மறு காலிடத்தில் கொழுவிய அவரைக் கொடி மலர்கின்ற பொறுத்தற் கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வாராத தலைவர் நீட்சியை யுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து அழுதலை யொழி யென்று கூறி நம் அழுத கண்ணீரை முன்பு துடைப்பார்; இப்பொழுது எத்தன்மையை உடையராவரோ?
முடிபு: தோழி, வாராதோர், முன்பு துடைப்பார்; இப்பொழுது யாராகுவர்கொல்?
கருத்து: தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 82. குறிஞ்சி - தலைவி கூற்று, இப்பொழுது, இலக்கியங்கள், முன்பு, தலைவி, குறிஞ்சி, துடைப்பார், தோழி, கூற்று, குறுந்தொகை, போலும், தலைவர், நோக்கி, எட்டுத்தொகை, சங்க, அவர், அன்புடையராயினும்