குறுந்தொகை - 62. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாட் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் நறுமையும் மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.)
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ ஐதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. 5 |
|
- சிறைக்குடி ஆந்தையார். |
நெஞ்சே! காந்தள் மலரையும் தோற்றிய அரும்பிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப்பூக்களையும் மணக்கின்ற இதழ்களையுடைய குவளைமலர்களோடு இடையிடையே பொருந்தும்படி கலந்து அழகிதாகத் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட மாலையைப்போல நறு நாற்றத்தையுடைய தலைவியது மேனியானது தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது; தழுவுதற்கும் இனியது.
முடிபு: நெஞ்சே, நல்லோளது நறிய மேனி முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிது.
கருத்து: தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 62. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, வாய்வது, முயங்கற்கும், நெஞ்சே, முறியினும், மென்மையும், எட்டுத்தொகை, சங்க, நறிய, மேனி