குறுந்தொகை - 61. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைமகனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி, "தலைவன் இங்கேவந்து தலைவியோடு இன்புறானாயினும், அவனது நட்பை மனத்தால் நினைந்து அமைதியுற்றுத் தலைவி இருத்தலின் அவள் வளைகள் செறிந்தன; ஆதலின் அவன் வந்து செய்யும் குறையொன்றிலம்" என்று கூறித் தோழி வாயில் மறுத்தது.)
தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின் ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப் பொய்கை யூரன் கேண்மை |
5 |
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. | |
- தும்பிசேர் கீரனார். |
தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டப்பெற்ற சிறு வண்டியை ஏறிச் செலுத்தி இன்பமடையாராயினும் கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப்போல மெய்யுற்று இன்பமடையேமாயினும் நல்ல தேர்களையும் பொய்கையையுமுடைய ஊர்க்குத் தலைவனது நட்பை மேன்மேலும் பெருகச் செய்து இன்பமடைந்தோம்; அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.
முடிபு: உற்று இன்புறேமாயினும் ஊரன்கேண்மையைச் செய்து இன்புற்றனெம்; வளை செறிந்தன.
கருத்து: தலைவர் எம்மை மறந்தாலும் யாம் அவரை மறவே மாயினேம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 61. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், செறிந்தன, குறுந்தொகை, கூற்று, வளைகள், செய்து, சங்க, எட்டுத்தொகை, நட்பை