குறுந்தொகை - 373. குறிஞ்சி - தோழி கூற்று
(அலர் மிக்கவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவனதுநட்பு என்றும் அழியாதது” என்று தோழி கூறியது.)
நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும் இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும் வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர்க் கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை |
5 |
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி காந்தளஞ் சிறுகுடிக் கமழும் ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே. |
|
- மதுரைக் கொல்லம் புல்லனார். |
தோழி! நீண்ட மயிரையும் கூரிய பற்களையுமுடைய கருங்குரங்கினது கறுப்பையுடைய விரல்களையுடைய ஆணானது பக்கத்திலே தோண்டியதனால் உடைந்து மலரின்மணத்தை வீசும் பலவினது பழம் காந்தளையுடைய அழகிய சிறிய ஊரினிடத்தேமணக்கின்ற ஓங்கிய மலையையுடைய நாடனோடு பொருந்தியநமது நட்பானது உலகம் இடம்மாறினாலும் நீரும் தீயும் தம் இயற்கையினின்றும் மாறினாலும் விளங்குகின்ற அலைகளையுடைய பெரியகடலுக்கு எல்லை தோன்றினாலும் வெவ்விய வாயையுடைய மகளிரதுபழிச்சொல்லை அஞ்சி கெடுதல்எவ்வாறு உடையதாகும்?
முடிபு: தோழி, நிலம்பெயரினும் நீரும் தீயும் பிறழினும் எல்லை தோன்றினும் தொடர்பு கேடு எவன் உடைத்து?
கருத்து: தலைவனோடு அமைந்த தொடர்பு என்றும் கெடாதது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 373. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, தீயும், எல்லை, தொடர்பு, நீரும், என்றும், எட்டுத்தொகை, சங்க, பிறழினும், தோன்றினும்