குறுந்தொகை - 310. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தன்னை வற்புறுத்திய தோழியின்பாற் சினமுற்று, “என் நிலையைத் தலைவருக்குஉரைப்பாருளராயின் என் உயிர் உளதாகும்” என்று கூறியது.)
புள்ளும் புலம்பின பூவிங் கூம்பின கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும் நம்மே போலும் மம்மர்த் தாகி எல்லைகழியப் புல்லென் றன்றே இன்னும் உளெனே தோழி இந்நிலை |
5 |
தண்ணிய கமழுஞாழல் தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே. |
|
- பெருங்கண்ணனார்.
|
தோழி! பறவைகளும்ஒலித்தன; மலர்களும் குவிந்தன; கடற்கரைச் சோலையும் தனிமையைமிகவுடையதாயிற்று; வானமும்! நம்மையே போன்ற மயக்கத்தையுடையதாகி பகல் கழிய அதனால் பொலிவழிந்தது; இந்த என் நிலைமையை தண்ணியனவாய் மணம் வீசுகின்றமலரையுடைய ஞாழல்கள் வளர்ந்த தண்ணிய அழகிய துறையை உடையதலைவருக்கு உரைப்பாரைப் பெற்றால் இனி மேலும் உயிரோடு இருப்பேனாவேன்.
முடிபு: தோழி, புலம்பின; கூம்பின; உடைத்து; புல்லென்றன்று;துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறின் இன்னும் உளென்.
கருத்து: யாரேனும் என் துயர்நிலையைத் தலைவனுக்குஉரைப்பாராயின் நன்றாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 310. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தோழி, தலைவி, நெய்தல், கூற்று, குறுந்தொகை, இன்னும், தண்ணிய, வானமும், கூம்பின, சங்க, புலம்பின, எட்டுத்தொகை