குறுந்தொகை - 272. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவி பெறுதற்கரியள் என்று தலைவன் கூறியது.)
தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த புன்கண் மடமா னேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் |
5 |
குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்கண் நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே. |
|
- ஒருசிறைப் பெரியனார். |
மாட்சிமைப்பட்ட வில்லை உடைய வீளை ஒலியை உடையோராய் கற்களை வீசி எழுப்பிய அகன்ற இடத்தை உடைய காட்டிடத்துத் தன் இனத்தினின்றும் பிரிந்த துன்பத்தையும் மடப்பத்தையும் உடைய பெண்மான் நேரே இருப்ப தன் தமையன்மார் சிலைத்தல் மாட்சிமைப்பட்ட மிக்க வேகத்தை உடைய ஆண் மானினது மருமத்திலே அழுந்தச் செய்து இரத்தத்தோடு பிடுங்கிய சிவந்த திரட்சியை உடைய அம்பு ஒன்றை ஒன்று மாறுபட்டாற் போன்ற மையுண்ட கண்களையும் மணம் வீசுகின்ற கரிய கூந்தலையும் உடைய தலைவியினுடைய தோள்களை மீட்டும் ஒரு கால் தழுவுதலும் என்பாற் பொருந்துவதோ!
முடிபு: உண் கண்ணையும் கூந்தலையும் உடைய கொடிச்சி தோள் தீண்டலும் இயைவது கொல்!
கருத்து: தலைவி பெறுதற்கரியவள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 272. குறிஞ்சி - தலைவன் கூற்று, உடைய, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, மாட்சிமைப்பட்ட, கொடிச்சி, கூந்தலையும், பிரிந்த, தலைவி, எட்டுத்தொகை, சங்க, தீண்டலும், இயைவது