குறுந்தொகை - 25. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் மணம்செய்து கொள்ளாமல் இருத்தல் பற்றி வருந்திய தலைவி, “தலைவர் அருள் பூண்டு என்னை வரைந்து கொண்டால் அன்றி எனக்கு உதவி செய்யத் தக்க சான்று பகர்வார் வேறு ஒருவரும் இலர்” என்று கூறியது).
யாரும் இல்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. |
5 |
- கபிலர். |
தோழி! தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறு ஒருவரும் இலர்; தலைவனாகிய கள்வன் ஒருவன்றான் இருந்தனன்; அங்ஙனம் இருந்த தலைவன் அப்பொழுது கூறிய சூளுறவினின்றும் தப்பினால் நான் யாது செய்ய வல்லேன்! ஓடுகின்ற நீரில் ஆரல் மீனின் வரவை உண்ணும் பொருட்டுப் பார்த்து நிற்கும் தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய நாரையும் இருந்தது.
முடிபு: தலைவன் மணந்த ஞான்று யாரும் இல்லை; தானே; தான் அது பொய்ப்பின் எவன் செய்வேன்! குருகும் உண்டு.
கருத்து: தலைவன் தான் கூறியபடி இன்னும் வரைந்து கொண்டானல்லன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 25. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவன், தலைவி, இலக்கியங்கள், குறிஞ்சி, மணந்த, குறுந்தொகை, கூற்று, ஆரல், பொய்ப்பின், குருகும், தான், கள்வன், வேறு, சங்க, எட்டுத்தொகை, வரைந்து, ஒருவரும், யாரும், தானே