குறுந்தொகை - 240. முல்லை - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "நான் அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; மாலைக் காலத்தில் அது மறைகின்றது; ஆதலின்ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர் வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி வாடை வந்ததன் றலையும் நோய்பொரக் கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் |
5 |
கடலாழ் கலத்திற் றோன்றி மாலை, மறையு மவர் மணிநெடுங் குன்றே. |
|
- கொல்லனழிசியார். |
தோழி! குளிர்ச்சியை உடைய புதலின்கட் படர்ந்த பசிய கொடியாகிய அவரையினது கிளி மூக்கை ஒப்பாக உடைய ஒளியை வெளிப்படுத்தும் பல மலர்கள் காட்டுப் பூனையின் பல்லைப் போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களோடு நெருங்கும்படி வாடை வீசுங்காலம் வந்ததற்கு மேலும் வருத்தம் என்னை அலைக்கும் வண்ணம் தலைவரது மணிகள் உண்டாகும்உயர்ந்த குன்று கடலில் ஆழ்கின்ற கப்பலைப் போலத் தோன்றி மாலைக் காலத்தில் மறையும்; இதனைக் காண்பாயாக.
முடிபு: தோழி, கஞல வாடை வந்ததன்றலையும் பொரக் குன்று மறையும்; கண்டிசின்.
கருத்து: அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; அது மறைவதால்ஆற்றேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 240. முல்லை - தலைவி கூற்று, தலைவி, முல்லை, இலக்கியங்கள், கூற்று, உடைய, தோழி, நோக்கி, காலத்தில், குறுந்தொகை, வாடை, கண்டிசின், குன்று, மறையும், அவர், எட்டுத்தொகை, சங்க, மலையை, ஆற்றினேன், மாலைக்