குறுந்தொகை - 211. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்தகாலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.)
அஞ்சி லோதி யாய்வளை நெகிழ நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல் எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத் தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை வேனி லோரிணர் தேனோ டூதி |
5 |
ஆராது பெயருந் தும்பி நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. |
|
- காவன்முல்லைப் பூதனார். |
தோழி! குறைந்து வேனிலால் வெம்பிய மராமரத்தினது ஓங்குதலையுடைய வெவ்விய கிளையின்கண் வேனிற் காலத்து மலர்ந்த ஒற்றைப்பூங்கொத்தை தேனென்னும் சாதிவண்டோடு ஊதி அதன்கண் ஒன்றுமின்மையின் உண்ணாமல் மீள்கின்ற தும்பியென்னும் வண்டுகளையுடைய நீரில்லாத இடங்களையுடைய பாலைநிலத்தைக் கடந்தோரும் அழகிய சிலவாகியகூந்தலையுடைய நினது அழகியவளைகள் நெகிழும்படி நம் விருப்பத்திற்குஉடம்பட்டு நம்பால் அருள் செய்யாராகி நம்மைப் பிரிந்து சென்றோருமாகிய தலைவர்பொருட்டு அஞ்சுதலை நீங்கினேம்.
முடிபு: தோழி, சுரன் இறந்தோராகிய நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம்.
கருத்து: தலைவர் மீளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 211. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, நம்மைப், அருள், எஞ்சினம், சங்க, எட்டுத்தொகை, பிரிந்த, தலைவர்