குறுந்தொகை - 21. முல்லை - தலைவி கூற்று
(தன் வரவுக்குரிய காலமாகத் தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் மெய்ம்யை உடையோராதலின், அவர் கூறிய பருவம் இஃதன்று” என்று கூறித்தான் ஆற்றி இருத்தலைப் புலப்படுத்தியது.)
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை கானங் காரெனக் கூறினும் யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. |
5 |
- ஓதலாந்தையார். |
தோழி! வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி செறிந்து மலர்ந்த நீட்சியை உடைய பூங்கொத்துக்களை தழைகளின் இடையே மேற்கொண்டு பொன்னால் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை கோத்துக் கட்டிய மகளிருடைய கூந்தலைப் போல கண்ணிற்குத் தோன்றுகின்ற புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய காடானது இது கார்ப் பருவமென்று அம் மலர்களால் தெரிவிப்பினும் நான் தெளியேன்; ஏனெனின் தலைவர் பொய்ம்மொழியைக் கூறார்.
முடிபு: கானம் காரெனக் கூறினும் அவர் பொய் வழங்கலராதலின் யான் தேறேன்.
கருத்து: இது கார்ப்பருவம் அன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 21. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, உடைய, குறுந்தொகை, அவர், காரெனக், கூறினும், கொன்றை, கார்ப், எட்டுத்தொகை, சங்க, கட்டிய