குறுந்தொகை - 197. நெய்தல் - தலைவி கூற்று
(பருவ வரவின்கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” எனத்துணிபு கூறிய தோழியை நோக்கி, ‘‘என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.)
யாதுசெய் வாங்கொல் தோழி நோதக நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதிர் உருவிற் கூற்றம் காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே. |
5 |
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
தோழி! நோதல் பொருந்தும்படி நீரை ஏற்றுக் கொண்ட மின் முதலியதொகுதியை யுடையனவாகிய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையையுடைய ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு மிக மயங்கிக் கலந்த கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம் தலைவரைப் பிரிந்திருக்கும்என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்!
முடிபு: தோழி, கூதிர் உருவிற் கூற்றம் எற்குறித்து வரும்; யாதுசெய்வாம்?
கருத்து: தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 197. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், கூற்றம், தோழி, குறுந்தொகை, கூற்று, கொண்ட, கூதிர்க், யாதுசெய்வாம், ஏற்றுக், எற்குறித்து, கூதிர், உருவிற், சங்க, எட்டுத்தொகை