குறுந்தொகை - 161. குறிஞ்சி - தலைவி கூற்று
(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.)
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப் புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி அன்னா வென்னும் அன்னையு மன்னோ என்மலைந் தனன்கொல் தானே தன்மலை |
5 |
ஆரம் நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே. |
|
- நக்கீரனார். |
தோழி! சூரியனும் விளக்கம் இலனாயினன்; மழையும் ஒழியாமல் பேய்கள் கண்ணை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி வேகமாகப் பெய்யும்; அதற்கு மேல் தாயும் புலிப்பற் கோத்த தாலியை யணிந்த மகனைத் தழுவி அன்னையே யென்று என்னை விளிப்பாள்; அப்பொழுது தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன் மழையில் நனைந்த யானையைப் போல இவ்வீட்டுப்புறத்தே வந்து நின்றான்; அந்தோ! அவன் எதனைச் செய்ய மேற் கொண்டானோ!
முடிபு: பொழுதும் எல்லின்று: பெயலும் வீசும்; அன்னையும் அன்னாவென்னும்; மார்பினன் வந்து நின்றனன்; என் மலைந்தனன் கொல்?
கருத்து: நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 161. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, வந்து, தலைவன், குறுந்தொகை, கூற்று, பெயலும், வீசும், மார்பினன், எல்லின்று, பொழுதும், அவன், சங்க, எட்டுத்தொகை