குறுந்தொகை - 159. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அணிமையிலே நின்றானாக, “தலைவியின் துயரத்தை உணர்ந்து இரங்காதாரை யுடையதாயிற்று இவ்வூர்” என்று கூறும் வாயிலாகத் தலைவியை இற்செறிக்கக் கருதி யிருப்பதைத் தோழி அவனுக்குப் புலப்படுத்தியது.)
தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம்மெல் ஆக நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும் |
5 |
அவல நெஞ்சமொ டுசாவாக் கவலை மாக்கட்டிப் பேதை யூரே. |
|
- வடம வண்ணக்கண் பேரிசாத்தனார். |
இந்தப் பேதைமையையுடைய ஊர் தழையை அணிந்த அல்குலை பொறுத்தலாற்றாத நுணுகிய சிறிய இடைக்கு துன்பம் உண்டாகும்படி அழகிய மெல்லிய மார்பகம் நிறையப் பருத்து பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள் செப்போடு மாறுபட்டன; பூத் தொழிலையுடைய குண்டலத்தை யணிந்த தலைவி என்ன துன்பத்தையுடையள் ஆவளோ என்று எண்ணும் கவலையையுடைய நெஞ்சத்தோடு ஏனென்று கேளாத கவலையையுடைய மாக்களை உடையது.
முடிபு: இப்பேதையூர் ‘பூங்குழை யாங்காகுவள்’ என உசாவாக் கவலைமாக்கட்டு.
கருத்து: என்தாய் முதலியோர் என் நிலையை உணர்ந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 159. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, கவலையையுடைய, சங்க, எட்டுத்தொகை