குறுந்தொகை - 158. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் இரவுக்காலத்தில் வந்து அளவளாவுங்காலத்து ஒரு நாள் பெருமழை உண்டாயிற்றாக, அவனது வரவுக்குத் தடை நிகழுமோவென அஞ்சிய தலைவி அவ்வச்சத்தைத் தலைவன் வந்த பின்னர் அம்மழையை நோக்கிக் கூறுவாளாய் அவன் கேட்பக் கூறியது.)
நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும் கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக் காலொடு வந்த கமஞ்சூல் மாமழை ஆரளி யிலையோ நீயே பேரிசை இமயமும் துளக்கும் பண்பினை |
5 |
துணையிலர் அளியர் பெண்டிர் இதெவனோ. | |
- அவ்வையார். |
உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்புகள் இறந்து படும்படி இடிக்கின்ற மிக்க வேகத்தையுடைய இடியேற்றினது இடிக்கும் முழக்கத்தோடு கலந்து காற்றோடு வந்த நிறைந்த நீராகிய சூலையுடைய பெரிய மழையே இயல்பாகவே நின்பால் நிறைந்த இரக்கத்தை நீ இப்பொழுது பெறவில்லையோ? பெரிய புகழையுடைய இமயமலையையும் அசைக்கின்ற தன்மையினை உடையாய்; நின்னால் அலைக்கப்படும் மகளிர் துணைவரைப் பெற்றிலர்; ஆதலின் இரங்கத் தக்கார்; அங்ஙனம் இருப்ப இங்ஙனம் நீ பெய்து அலைத்தல் எதன் பொருட்டு?
முடிபு: மாமழை, நீ அளியிலையோ? இமயமும் துளக்கும் பண்பினை; பெண்டிர் துணையிலர்; அளியர்; இஃது எவன்?
கருத்து: இதுகாறும் தலைவர் வாராமையின் இப்பெருமழையினால் அவர் வரவு தடைப்படுமோ வென்று அஞ்சினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 158. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, வந்த, அளியர், துணையிலர், நிறைந்த, பெரிய, பண்பினை, பெண்டிர், இடிக்கும், சங்க, எட்டுத்தொகை, தலைவன், மாமழை, இமயமும், துளக்கும்