குறுந்தொகை - 143. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நம்முடைய வருத்தத்தை யறிந்து இரங்கும் தன்மை யுடையவர்; ஆதலின் அவர் விரைவில் வருவர்; நின் மேனிப் பசப்பு அவர் வரவால் நீங்கிவிடும்” என்று தோழி கூறியது.)
அழிய லாயிழை அன்பு பெரிதுடையன் பழியும் அஞ்சும் பயமலை நாடன் நில்லா மையே நிலையிற் றாகலின் நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் |
5 |
தங்குதற் குரிய தன்றுநின் அங்கலுழ் மேனிப் பாய பசப்பே. |
|
- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். |
தெரிந்து அணிந்த அணிகலங்களையுடையாய் பயனையுடைய மலைநாட்டுக்குத் தலைவன் நம்மைப் போல இரங்குதலை மிக உடையன்; பழியையும் அஞ்சுவான்; நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகத்தில் நிலைபெற்றதாதலின் நிலை பெறுதலையுடைய நல்ல புகழை விரும்பிய நீதியையுடைய நெஞ்சையுடைய ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல நினது அழகு ஒழுகும் மேனியின் கண் பரவிய பசலை தங்குவதற்கு உரிமை யுடையதன்று; ஆதலின் நீ வருந்தாதே.
முடிபு: ஆயிழை, நாடன் அழிபு பெரிதுடையன்; பழியும் அஞ்சும்; நின் மேனிப் பாய பசப்பு தங்குதற்குரியதன்று.
கருத்து: தலைவன் நம்பால் இரங்கி விரைவில் வந்து வரைந்து கொள்வான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 143. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மேனிப், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தலைவன், பசப்பு, பெரிதுடையன், அஞ்சும், நாடன், பழியும், ஆதலின், எட்டுத்தொகை, சங்க, அவர், விரைவில், நின்