குறுந்தொகை - 118. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் இருப்ப, தலைவி அவன் வரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குவாளாய் மாலைப் பொழுதில், “இன்னும் வந்திலர்” என்று கூறி வருந்தியது.)
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய நள்ளென வந்த நாரில் மாலைப் பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் வாரார் தோழிநங் காத லோரே. |
5 |
- நன்னாகையார். |
தோழி! பறவைகளும் விலங்கினங்களும் தனிமையோடு தங்க நள்ளென்னும் ஓசைபட வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில் பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி வினாவுவார் உள்ளே வருவீர் இருக்கின்றனிரோ என்று கேட்கவும் நம் தலைவர் வாரார் ஆயினர்.
முடிபு: தோழி, மாலையில் கடவுநர், வருவீர் உளீரோ எனவும் நம் காதலோர் வாரார்.
கருத்து: நம் தலைவர் இன்றும் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 118. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, வருவீர், நெய்தல், குறுந்தொகை, கூற்று, வாரார், எனவும், தோழி, தலைவர், உளீரோ, மாலைப், எட்டுத்தொகை, சங்க, வந்த, கடவுநர்