அகநானூறு - 322. குறிஞ்சி
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, பாம்பு எறி கோலின் தமியை வைகி, |
5 |
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், |
10 |
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, புகல் அரும், பொதியில் போலப் |
15 |
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! |
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 322. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, மயங்கு, எட்டுத்தொகை, சங்க