அகநானூறு - 273. பாலை
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின், பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ, ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப, புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம், நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் |
5 |
அறியார்கொல்லோ, தாமே? அறியினும், நம் மனத்து அன்ன மென்மை இன்மையின், நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ? யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு |
10 |
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி, ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை, ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி, புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் |
15 |
நில வரை எல்லாம் நிழற்றி, அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே. |
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-அவ்வையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 273. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, வரல், எட்டுத்தொகை, சங்க